Wednesday, 19 October 2016
இராமானுஜம்1000: இராமானுஜ நூற்றந்தாதி
இராமானுஜம்1000: இராமானுஜ நூற்றந்தாதி: -திருவரங்கத்தமுதனார் ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜரைப் போற்றி மகிழும் ‘இராமானுஜர் நூற்றந்தாதி’யை திருவரங்கத்தமுதனார் இயற்றினார். 108 பாக...
Monday, 17 October 2016
'கருணைக்கடல் இராமானுசர் காவியம்'
எம்பெருமான் திருவரங்கம் எங்கே? எங்கே?
வையவன்
------------------------------ ----------------------
எம்பெருமான் திருவரங்கம் எங்கே? எங்கே?
இப்படி ஒரு பழம்பாடல். பிரபல இதழ்த்தொகுப்பாளரும் எழுத்தாளருமான அமரர்.வே.சபாநாயகம் எங்கள் ஊரில் நான் பணியாற்றிய பள்ளிக்கு இலக்கியச் சொற்பொழிவுக்கு வந்து எங்கள் பள்ளி மாணவர்களுக்குப் பாடிக்காட்டி அறிமுகப்படுத்தியது. அந்தப் பாடலின் நினைவு இந்த நூலை வாசிக்கும்போது என் உள்ளத்தில் எழுந்தது. அந்தப் பாடலின் உள்ளத்தை உருக்கும் ஏக்கம் இந்த நூல் வழியே வெளிப்பட்டதை என் உட் செவிகள் உணர்ந்தன. இது ஸ்ரீவைஷ்ணவ தத்வஜோதியும், விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் மூலபுருஷருமான ஸ்ரீ ராமானுஜர் 1000ம் ஆண்டு. 2017 ல் நிறைவுறும் இந்த ஆண்டில் தமிழிலும் பிறமொழிகளிலும் அவரது வாழ்வும் பணியும் நூல்கள்,டிவி தொடர், திரைப்படம் எனப் பலவடிவங்களில் வந்தன.வந்துகொண்டிருக்கின்றன. வரும். தமிழில் அவரை நாயகனாக்கி காவியம் வந்ததில்லை. தற்போது அந்தக் குறையைப் பூர்த்தி செய்திருக்கிறார் கவிஞர். சிற்பி. 'ஒரு கிராமத்து நதி 'என்ற மிகச் சிறந்த கவிதைத் தொகுதியைப் படைத்து சாஹித்ய அகாடெமி விருது பெற்ற சிற்பி படைத்துள்ள காவியம் தான் 'கருணைக்கடல் இராமானுசர் காவியம்'
கவிஞர் சிற்பி மரபுக்கவிதையின் கட்டுப்பாடுகளைத் தகர்க்கிற மற்றொரு முயற்சியாகத் தோன்றிய வானம்பாடி கவிதை இயக்கத்தின் பிதாமகர்களில் ஒருவர். இதுவோ முழுக்க முழுக்க மரபுக்கவிதை.
இந்த மாற்றத்திற்குச் சிற்பிகூறும் காரணம் 'பழமைக்குப் பழமையாய்ப் புதுமைக்குப் புதுமையான இராமானுசர் என்னை மரபுக்குப்போ என்று கட்டளை இட்டார் ; அதை எப்படி நான் மீற முடியும்?' ஸ்ரீமத் பரமஹம்ஸ அப்பன் பரகால ராமானுஜ எம்பார் ஜீயர் ஸ்வாமி தம் சொந்தக் கையெழுத்தில் எழுதியருளிய மங்களா சாஸனம் அதற்கு ஆசி வழங்குகிறது, "புற்றீசல் போலப் பெருகிவரும் புதுக் கவிதைகள் மலிந்து மரபுக்கு கவிதை மறைந்து விடுமோ என்று அச்சம் தோன்றும் இந்நாளில் சிற்பியின் காவிய நாயகன் [மரபு வழியில்] உருவாவது மிகப் பொருத்தமானது" என்று.
மேலைநாட்டுக் காப்பியமுறையையொட்டி கட்டுமானம், தெளிவு என்று சிற்பி அழகு கூட்டியுள்ளப் பெருமையை பேராசிரியர். தே.ஞானசுந்தரம் எடுத்துக் காட்டுவதை ஜீயர் ஸ்வாமிகளும் சுட்டிக்காட்டுகிறார்.
காவியம் என்பது அதற்கே உரித்தான மரபு அமைப்புக்களைக் கொண்டது என்று நன்கறிந்த பெரும்புலவரான சிற்பி வாலமீகி இராமாயணத்தைத் தமிழுக்குக் கொண்டுவந்து கம்பர் இராம காவியம் எழுதும்போது கடைப்பிடித்த காப்பிய நெறியை சற்றும் வழுவாமல் சிற்பியும் கடைப்பிடித்து இராமானுஜர் காலத்திற்கேற்ப பாயிரத்திலிருந்து தொடங்கி, ராமானுஜர் வாழ்க்கை நிகழ்ச்சிகளை அடுக்கடுக்காக விவரித்துக் காவிய மரபின் இலக்கணம் காப்பது மகிழ்ச்சி தருகிறது.
இக்காவியம் படைக்க சிற்பி அணுகிய முதல் நூல்கள், நுட்பமான ஆய்வு நூல்கள் ஆகியன பின்னிணைப்பில் உள்ளன. இது சிற்பியின் புலமைக்கண்ணோட்டத்தோடு கூடிய ஆய்வு நெறி புலப்படுத்துகிறது, கவிப்பண்பு இதனை மீறலாகாது என்று கூறாமல் கூறுகிறார் சிற்பி. ஸ்ரீ ராமானுஜரின் வரலாற்றைப் படலம் படலமாக மீதூறும் பரவசத்தோடு கவியின் உள்ளுணர்வுத் தொனியின் ஒலி நம்முள் கூடவே உள்ளுக்குள் ஒலித்தபடி, வாசிக்கிறோம். கையில் எடுத்தால் வைக்க மனம் வரவில்லை; காவிய நாயகர் நம்மை அப்படி ஆட்கொள்கிறார் கவியின் மூலம். தமிழில் இவ்வளவு எளிய சொற்களுடன் எந்த இடத்திலும் பொருள் தேடித் புரிந்து கொள்ளவேண்டிய, சிரமம் வைக்காத எளிமை இதுகாறும் தோன்றியுள்ள காப்பியங்களில் இராமகாவியம் உட்பட எதிலும் கிடைக்கவில்லை என்பது ஐம்பத்தைந்து ஆண்டுகளாக தமிழோடு உறவாடி வருகிற என் அனுபவம். புதுக்கவிதை சிற்பிக்குப் புகட்டிய தாய்ப்பால் ஞானம் உதவி உள்ளது.
இராமானுஜரின் பின்புலமும் ஒரு கிராமம் தான். அதைப் பாடும்போது சிற்பியின் கற்பனை களை கூட்டுகிறது
தெளியாத மறைநிலங்கள் தெளிவித்தோனை
செம்பவள வாய்க்கிளிகள் கொஞ்சிப்பேசும்
குளிர்சோலைத் தென்திருக்குருகூர்ச் செல்வம் தன்னை என்று அவர் பிறந்த பூமியைப் போற்றும் கவி தம் முன்னோரான கவிச்சக்கரவர்த்தி பாணியில் நூல் தோன்றிய வரலாற்றில் .
அன்னை மடி மீதேறிப் பிஞ்சுக்காலால்
ஆடுகிறேன் சிறுமழலைப் பிழைகளுண்டோ-என்று தன்னடக்கம் கூறிக்கொள்கிறார்
காட்டுமன்னார்குடி வீர நாராயணப் பெருமாள் கோவில் ஆராதனையின்போது தெய்வீகத்திருப்பாசுரங்கள் இல்லாதைக் கவிப்பார்வை
பாற்கடலுக்குள் அமிழ்தம் என
மறதிக் கடலுக்குள் கிடந்தது தமிழமுது
என்று காண்கிறது.
முடியரசராக ஆளவந்தார் திருவரங்கத்தானைக் காண அரங்கம் சென்றதை
விவரிக்கும்போது
நதியொன்று கருங்கடலில் கரைந்தாற்போன்று
நாயகனுக்கு ஆளான ஆளவந்தார் என்று அகம் அழிந்த காட்சியைக் காட்டுகிறார்.
இராமானுசரைத் திருவரங்கத்துக்கு அழைத்துச் செல்லவந்த திருஅரங்கப் பெருமான் அரையர் அருளாளப் பெருமாள் முன்பு உருகிப் பாடும் காட்சியில்
பண்ணுருகும் அரையர்தமிழ் அமுதம் கேட்டுப்
பனி யுருகும் இளங்காலை ; உருகும் நெஞ்சம் ;
மண்ணுருகும் மாளுருகும்; மால்கரத்தின்
மதுரை இசைச் சங்குருகும் ; உருகும் ஆழி என்று கவித்திறன் காட்டுகிறார்
பாணர் குலா மங்கையை வழிவிலாகச் சொன்ன இராமாநுஜரிடம் அவள் கேட்கும் கேள்வி அழகிய கவியாகி உதிர்கிறது.
முன்னாலே தேவரீர்; பின்னாலே கண்ணபுரக்கோயில்;
வலதுபுறத்தில் திருமங்கை ஆழ்வார் கோயில்
இடப்புறத்தில் திருவாலிப் பெருமான் கோயில் ;
எங்கே நான் விலக.
இராமானுஜரின் வாழ்வில் தூதுவளைக் கீரை, நீர்க்குடத்தில் கைவிட்டுப் புதுமணத் தம்பதியர் மோதிரம் எடுக்கும் சடங்கு, மயங்கி வீழ்ந்த பெரிய நம்பி முகத்தில் நீர் தெளித்து எழுப்பல் என்று பல
சிறுசிறு நிகழ்ச்சிகளும் கவிப்பார்வையில் பட்டு நமக்குக் களிப்பூட்டுகின்றன
ஸ்ரீ ராமானுஜர் அருமை பெருமை போற்றும் இந்த நூலில் ஆழ்வார்கள் பற்றி வேடுவர்களுக்குச் சொல்வது போல் உள்ளம் தோய்ந்து சிற்பி அறிமுகம் செய்கிறார்
நாரண நம்பிக்குத்
தீபம் முதன் முதல்
ஏற்றிய ஆழ்வார்கள் என்று தொடக்கம் சொல்லி
ஆரணமாய்த் தமிழ்
தந்த பொய்கை பூதம்
பேயார் எனச் சொல்லுவார்
கண்ணனைப் பெற்றவள்
தோற்றுவிட்டாள் பெரி
யாழ்வாரின் தாய்மையிலே
விண்ணளந் தானுக்குப்
பல்லாண்டு கள் கூறும்
நெஞ்சத்துத் தூய்மையிலே
என்று வர்ணித்து ஆண்டாள். திருமழிசை, திருமங்கை, மதுரகவி, திருப்பாணர் ,குலசேகரர் ,தொண்டரடிப்பொடி, நம்மாழ்வார் என ஒவ்வொருவருக்கும்,ஒரு தனிச்சிறப்பான அடைமொழி வழங்கி தம் உள்ளத்தில் அவர்கள் வகித்துள்ள இடத்தை சிற்பி புலப்படுத்தி மேன்மை பெறுகிறார்.
நல்ல காவியம் எழுதுமாறு தம்மை ஊக்குவித்த பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களை கம்பர் சடையப்பரைப் பாடியது போல் கவிஞர் சிற்பி ..
"எழுதெழுது காவியமொன் றெழு தென் றென்னை
எக்காலும் ஊக்குவித்த சால்பின் மிக்கார்
தொழுதகைய அருட்செல்வர் பொள்ளாச்சிச் சீர்
தூய மகாலிங்கனார் தூண்டத் தூண்ட
அழுதழுது நான்கற்ற எதிராசர்தம்
அருளமுதை வரலாற்றின் கனிவும் கூடி
எழில்இராமாநுசப்பெருமான் காவியத்தை
இயற்றுதற்குக் காரணமாய் இசைந்ததன்றோ?"
என்று குறிப்பிடும்போது இக்காவியம் பிறக்க ஒரு வரலாறும் அழுது அழுது கற்ற கனிவும் வெளிப்படுகின்றன.
இராமானுசர் வரலாற்றை சிற்பி கவிதா பதிப்பக வெளியீடாக ஏற்கனவே ஒரு உரை நடை நூலாகப் படைத்திருக்கிறார்.
24 முழுப்பக்க ஓவியங்கள் அலங்கரிக்கும் இந்நூலில் முன்னாள் கம்யூனிஸ்டாக இருந்த திரு.நவபாரதி அவர்கள் 43 பக்கங்களுக்கு எழுதிய அணிந்துரையான ஒரு மகாதரிசனம் வைகுந்தத்துக்குப் போக வாசல் திறப்பு போல் அத்தனைப் பெருமை கொண்டதாக அமைந்துள்ளது. அஹம் பிரம்மாஸ்மி என்ற மஹாவாக்யத்தின் அடிப்படையில் உதிக்கின்ற அத்வைதம் அறிவிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து உணர்வுக்கு இடமே இல்லாது செய்து அகங்காரத்தை உச்சப்படுத்தும் வழியை நீக்கி /வைணவம் அகங்காரத்தை முற்றிலும் அடக்கி பவ்யத்தை தங்கசிம்மாசனத்தில் அமர்த்திக் காட்டும் தரிசன மார்க்கம். எந்த உண்மை வைணவர் கடிதம் எழுதினாலும் ஸ்ரீராமானுஜர் போற்றி என்று எழுதாமல் தொடங்குவதில்லை. அவ்வாறே முடிக்கும்போதும் , தம்மை அறிமுகப்படுத்தும்போதும், விடைபெறும் போதும் அடியேன் என்று கூறாமல் இருப்பதில்லை.
அந்தப் பரம பவ்யமும் பக்திப் பரவசமும் [இவ்வளவு தேவையா என்று நமக்கே தோன்றுமளவு] நூலின் ஒவ்வொரு பகுதியிலும் தெற்றென வெளிப்படுவது வாசிப்பவர் கண்ணில் சட்டெனத் தென்படும் மொத்தத்தில் 21ம் நூற்றாண்டிற்குக் கவிஞர் சிற்பியும், பதிப்பித்த பழனியப்பா பிரதர்ஸும் வழங்கியுள்ள பொற் கொடையே கருணைக்கடல் இராமானுசர் காவியம்
நூல்:கருணைக்கடல் இராமானுசர் காவியம்
ஆசிரியர்: கவிஞர் சிற்பி
பக்கங்கள்:418
விலை:ரூ.380/=
வெளியீடு:பழனியப்பா பிரதர்ஸ்
25, பீட்டர்ஸ் சாலை
சென்னை-600014
Ph: 04428132863
Subscribe to:
Posts (Atom)