Wednesday 19 October 2016

இராமானுஜம்1000: இராமானுஜ நூற்றந்தாதி

இராமானுஜம்1000: இராமானுஜ நூற்றந்தாதி: -திருவரங்கத்தமுதனார் ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜரைப் போற்றி மகிழும் ‘இராமானுஜர் நூற்றந்தாதி’யை திருவரங்கத்தமுதனார் இயற்றினார். 108 பாக...

Monday 17 October 2016

'கருணைக்கடல் இராமானுசர் காவியம்'

                                              
எம்பெருமான் திருவரங்கம் எங்கே? எங்கே?

வையவன் 
----------------------------------------------------
எம்பெருமான் திருவரங்கம் எங்கே? எங்கே?
இப்படி ஒரு பழம்பாடல். பிரபல இதழ்த்தொகுப்பாளரும் எழுத்தாளருமான அமரர்.வே.சபாநாயகம் எங்கள் ஊரில் நான் பணியாற்றிய பள்ளிக்கு இலக்கியச் சொற்பொழிவுக்கு வந்து எங்கள் பள்ளி மாணவர்களுக்குப் பாடிக்காட்டி  அறிமுகப்படுத்தியது. அந்தப் பாடலின் நினைவு இந்த நூலை வாசிக்கும்போது என் உள்ளத்தில் எழுந்தது. அந்தப் பாடலின் உள்ளத்தை உருக்கும் ஏக்கம் இந்த நூல் வழியே வெளிப்பட்டதை என் உட் செவிகள் உணர்ந்தன. இது ஸ்ரீவைஷ்ணவ தத்வஜோதியும், விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் மூலபுருஷருமான  ஸ்ரீ ராமானுஜர் 1000ம் ஆண்டு.  2017 ல் நிறைவுறும் இந்த ஆண்டில்  தமிழிலும் பிறமொழிகளிலும் அவரது வாழ்வும் பணியும் நூல்கள்,டிவி தொடர், திரைப்படம் எனப் பலவடிவங்களில் வந்தன.வந்துகொண்டிருக்கின்றன. வரும். தமிழில் அவரை நாயகனாக்கி காவியம் வந்ததில்லை. தற்போது அந்தக் குறையைப் பூர்த்தி செய்திருக்கிறார் கவிஞர். சிற்பி. 'ஒரு கிராமத்து நதி 'என்ற மிகச் சிறந்த கவிதைத் தொகுதியைப் படைத்து சாஹித்ய அகாடெமி விருது பெற்ற சிற்பி படைத்துள்ள காவியம் தான் 'கருணைக்கடல் இராமானுசர் காவியம்'
                                                               

கவிஞர்  சிற்பி மரபுக்கவிதையின் கட்டுப்பாடுகளைத் தகர்க்கிற மற்றொரு முயற்சியாகத் தோன்றிய  வானம்பாடி கவிதை இயக்கத்தின் பிதாமகர்களில் ஒருவர். இதுவோ  முழுக்க முழுக்க மரபுக்கவிதை.
 இந்த மாற்றத்திற்குச்  சிற்பிகூறும் காரணம்  'பழமைக்குப் பழமையாய்ப்  புதுமைக்குப் புதுமையான இராமானுசர் என்னை மரபுக்குப்போ என்று கட்டளை இட்டார் ; அதை எப்படி நான் மீற முடியும்?'  ஸ்ரீமத் பரமஹம்ஸ அப்பன் பரகால ராமானுஜ எம்பார் ஜீயர் ஸ்வாமி தம் சொந்தக் கையெழுத்தில் எழுதியருளிய மங்களா சாஸனம் அதற்கு ஆசி வழங்குகிறது, "புற்றீசல் போலப் பெருகிவரும் புதுக் கவிதைகள் மலிந்து மரபுக்கு கவிதை மறைந்து விடுமோ என்று அச்சம் தோன்றும் இந்நாளில் சிற்பியின் காவிய நாயகன் [மரபு வழியில்] உருவாவது மிகப்  பொருத்தமானது" என்று. 
                                                                 

மேலைநாட்டுக் காப்பியமுறையையொட்டி  கட்டுமானம்,  தெளிவு என்று சிற்பி அழகு கூட்டியுள்ளப் பெருமையை பேராசிரியர். தே.ஞானசுந்தரம் எடுத்துக் காட்டுவதை ஜீயர் ஸ்வாமிகளும் சுட்டிக்காட்டுகிறார். 
காவியம் என்பது அதற்கே உரித்தான மரபு அமைப்புக்களைக் கொண்டது என்று நன்கறிந்த பெரும்புலவரான சிற்பி வாலமீகி இராமாயணத்தைத் தமிழுக்குக் கொண்டுவந்து கம்பர் இராம காவியம் எழுதும்போது கடைப்பிடித்த காப்பிய நெறியை சற்றும் வழுவாமல் சிற்பியும் கடைப்பிடித்து இராமானுஜர் காலத்திற்கேற்ப பாயிரத்திலிருந்து தொடங்கி, ராமானுஜர் வாழ்க்கை நிகழ்ச்சிகளை அடுக்கடுக்காக விவரித்துக் காவிய மரபின் இலக்கணம் காப்பது மகிழ்ச்சி தருகிறது. 
இக்காவியம் படைக்க சிற்பி அணுகிய முதல் நூல்கள், நுட்பமான ஆய்வு நூல்கள் ஆகியன பின்னிணைப்பில் உள்ளன. இது  சிற்பியின் புலமைக்கண்ணோட்டத்தோடு  கூடிய ஆய்வு நெறி புலப்படுத்துகிறது, கவிப்பண்பு இதனை மீறலாகாது என்று கூறாமல் கூறுகிறார் சிற்பி. ஸ்ரீ ராமானுஜரின் வரலாற்றைப் படலம் படலமாக மீதூறும் பரவசத்தோடு கவியின் உள்ளுணர்வுத் தொனியின் ஒலி நம்முள் கூடவே உள்ளுக்குள் ஒலித்தபடி, வாசிக்கிறோம். கையில் எடுத்தால் வைக்க மனம் வரவில்லை; காவிய நாயகர் நம்மை அப்படி ஆட்கொள்கிறார் கவியின் மூலம். தமிழில்  இவ்வளவு எளிய சொற்களுடன்  எந்த இடத்திலும்  பொருள் தேடித் புரிந்து கொள்ளவேண்டிய, சிரமம் வைக்காத எளிமை இதுகாறும் தோன்றியுள்ள காப்பியங்களில் இராமகாவியம் உட்பட எதிலும் கிடைக்கவில்லை என்பது ஐம்பத்தைந்து ஆண்டுகளாக தமிழோடு உறவாடி வருகிற என் அனுபவம். புதுக்கவிதை சிற்பிக்குப் புகட்டிய தாய்ப்பால் ஞானம் உதவி உள்ளது.       
 இராமானுஜரின் பின்புலமும் ஒரு கிராமம் தான். அதைப் பாடும்போது சிற்பியின் கற்பனை களை கூட்டுகிறது 
    தெளியாத மறைநிலங்கள் தெளிவித்தோனை 
           செம்பவள வாய்க்கிளிகள் கொஞ்சிப்பேசும் 
   குளிர்சோலைத் தென்திருக்குருகூர்ச் செல்வம் தன்னை  என்று அவர் பிறந்த பூமியைப் போற்றும் கவி   தம் முன்னோரான கவிச்சக்கரவர்த்தி பாணியில்  நூல் தோன்றிய வரலாற்றில் .
      அன்னை மடி மீதேறிப் பிஞ்சுக்காலால் 
ஆடுகிறேன் சிறுமழலைப் பிழைகளுண்டோ-என்று தன்னடக்கம் கூறிக்கொள்கிறார்
காட்டுமன்னார்குடி வீர நாராயணப் பெருமாள் கோவில் ஆராதனையின்போது தெய்வீகத்திருப்பாசுரங்கள் இல்லாதைக் கவிப்பார்வை 
     பாற்கடலுக்குள் அமிழ்தம் என 
       மறதிக் கடலுக்குள் கிடந்தது தமிழமுது
என்று காண்கிறது.
முடியரசராக ஆளவந்தார் திருவரங்கத்தானைக் காண அரங்கம் சென்றதை 
விவரிக்கும்போது 
நதியொன்று கருங்கடலில் கரைந்தாற்போன்று 
     நாயகனுக்கு ஆளான ஆளவந்தார்  என்று  அகம் அழிந்த காட்சியைக் காட்டுகிறார்.
இராமானுசரைத் திருவரங்கத்துக்கு அழைத்துச் செல்லவந்த திருஅரங்கப் பெருமான் அரையர் அருளாளப் பெருமாள் முன்பு உருகிப் பாடும் காட்சியில் 
பண்ணுருகும் அரையர்தமிழ்  அமுதம் கேட்டுப்
பனி யுருகும் இளங்காலை ; உருகும் நெஞ்சம் ;
மண்ணுருகும் மாளுருகும்; மால்கரத்தின்
மதுரை இசைச் சங்குருகும் ; உருகும் ஆழி என்று கவித்திறன் காட்டுகிறார் 
பாணர் குலா மங்கையை வழிவிலாகச் சொன்ன இராமாநுஜரிடம் அவள் கேட்கும் கேள்வி அழகிய கவியாகி உதிர்கிறது. 
முன்னாலே தேவரீர்; பின்னாலே கண்ணபுரக்கோயில்;
வலதுபுறத்தில் திருமங்கை ஆழ்வார் கோயில்
இடப்புறத்தில் திருவாலிப் பெருமான் கோயில் ; 
எங்கே நான் விலக.
இராமானுஜரின் வாழ்வில் தூதுவளைக் கீரை, நீர்க்குடத்தில் கைவிட்டுப் புதுமணத் தம்பதியர் மோதிரம் எடுக்கும் சடங்கு, மயங்கி வீழ்ந்த பெரிய நம்பி முகத்தில் நீர் தெளித்து எழுப்பல் என்று பல 
சிறுசிறு நிகழ்ச்சிகளும் கவிப்பார்வையில் பட்டு நமக்குக் களிப்பூட்டுகின்றன 
   ஸ்ரீ ராமானுஜர் அருமை பெருமை போற்றும் இந்த நூலில் ஆழ்வார்கள் பற்றி வேடுவர்களுக்குச் சொல்வது போல் உள்ளம் தோய்ந்து சிற்பி அறிமுகம் செய்கிறார் 
                         நாரண நம்பிக்குத் 
                        தீபம் முதன் முதல் 
                       ஏற்றிய ஆழ்வார்கள் என்று தொடக்கம் சொல்லி 
                        ஆரணமாய்த் தமிழ்
                        தந்த பொய்கை பூதம் 
                        பேயார் எனச் சொல்லுவார் 
                      
                        கண்ணனைப் பெற்றவள் 
                       தோற்றுவிட்டாள் பெரி 
                       யாழ்வாரின் தாய்மையிலே  
                      
                       விண்ணளந் தானுக்குப் 
                       பல்லாண்டு கள் கூறும் 
                      நெஞ்சத்துத் தூய்மையிலே 
என்று  வர்ணித்து ஆண்டாள். திருமழிசை, திருமங்கை, மதுரகவி, திருப்பாணர் ,குலசேகரர் ,தொண்டரடிப்பொடி, நம்மாழ்வார் என ஒவ்வொருவருக்கும்,ஒரு தனிச்சிறப்பான அடைமொழி வழங்கி தம் உள்ளத்தில் அவர்கள் வகித்துள்ள இடத்தை சிற்பி புலப்படுத்தி மேன்மை பெறுகிறார்.
நல்ல காவியம் எழுதுமாறு தம்மை ஊக்குவித்த பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களை கம்பர் சடையப்பரைப் பாடியது போல் கவிஞர் சிற்பி ..
"எழுதெழுது காவியமொன் றெழு தென் றென்னை 
எக்காலும் ஊக்குவித்த சால்பின் மிக்கார் 
தொழுதகைய அருட்செல்வர் பொள்ளாச்சிச் சீர் 
தூய மகாலிங்கனார் தூண்டத் தூண்ட 
அழுதழுது நான்கற்ற எதிராசர்தம்
அருளமுதை வரலாற்றின் கனிவும் கூடி 
எழில்இராமாநுசப்பெருமான் காவியத்தை 
இயற்றுதற்குக் காரணமாய் இசைந்ததன்றோ?"
என்று குறிப்பிடும்போது இக்காவியம் பிறக்க ஒரு வரலாறும் அழுது அழுது கற்ற கனிவும் வெளிப்படுகின்றன.
இராமானுசர் வரலாற்றை சிற்பி கவிதா பதிப்பக வெளியீடாக ஏற்கனவே ஒரு உரை நடை நூலாகப் படைத்திருக்கிறார்.  
  24 முழுப்பக்க ஓவியங்கள் அலங்கரிக்கும் இந்நூலில் முன்னாள் கம்யூனிஸ்டாக இருந்த திரு.நவபாரதி அவர்கள் 43 பக்கங்களுக்கு எழுதிய அணிந்துரையான ஒரு மகாதரிசனம் வைகுந்தத்துக்குப் போக வாசல் திறப்பு  போல் அத்தனைப் பெருமை கொண்டதாக அமைந்துள்ளது. அஹம் பிரம்மாஸ்மி என்ற மஹாவாக்யத்தின் அடிப்படையில் உதிக்கின்ற அத்வைதம் அறிவிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து உணர்வுக்கு இடமே இல்லாது செய்து அகங்காரத்தை உச்சப்படுத்தும் வழியை நீக்கி /வைணவம் அகங்காரத்தை முற்றிலும் அடக்கி பவ்யத்தை தங்கசிம்மாசனத்தில் அமர்த்திக் காட்டும் தரிசன மார்க்கம். எந்த உண்மை வைணவர் கடிதம் எழுதினாலும் ஸ்ரீராமானுஜர்   போற்றி என்று எழுதாமல் தொடங்குவதில்லை. அவ்வாறே முடிக்கும்போதும் , தம்மை அறிமுகப்படுத்தும்போதும், விடைபெறும் போதும் அடியேன் என்று கூறாமல் இருப்பதில்லை. 
 அந்தப் பரம பவ்யமும் பக்திப் பரவசமும் [இவ்வளவு தேவையா என்று நமக்கே தோன்றுமளவு] நூலின் ஒவ்வொரு பகுதியிலும் தெற்றென வெளிப்படுவது வாசிப்பவர் கண்ணில் சட்டெனத் தென்படும் மொத்தத்தில் 21ம் நூற்றாண்டிற்குக் கவிஞர் சிற்பியும், பதிப்பித்த பழனியப்பா பிரதர்ஸும் வழங்கியுள்ள பொற் கொடையே கருணைக்கடல் இராமானுசர் காவியம்  
   நூல்:கருணைக்கடல் இராமானுசர் காவியம்  
   ஆசிரியர்: கவிஞர் சிற்பி
  பக்கங்கள்:418
  விலை:ரூ.380/=
   வெளியீடு:பழனியப்பா பிரதர்ஸ் 
                      25, பீட்டர்ஸ் சாலை 
                      சென்னை-600014 
                       Ph: 04428132863




 
 
 

Sunday 17 July 2016

வோர்ட் பிரஸ் மூலம் இணையதளம் வடிவமைக்கலாம் வாங்க !


வோர்ட் பிரஸ் மூலம் இணையதளம் வடிவமைக்கலாம் வாங்க !    
இவ்வாறு இணைய தளம் அமைக்க மிக எளிய அறிமுகம் தந்து  வாசகர்களை அன்போடு அழைப்பவர் 



                           குணசீலன் வீரப்பெருமாள். [author.guna@gmail.com]
இன்று இணைய உலகம் காற்று போல எங்கும் எதிலும் பரந்து விரிந்து கொண்டிருக்கிறது. இதன் தாக்கமாக மளிகை கடை அண்ணாச்சி முதல் மல்டி நேஷனல் கம்பெனியின் எக்சிகியூடிவ் வரை எல்லோரும் தனக்கென தனியே ஒரு இணையதளம் வைத்திருக்கிறார்கள். இணையதளம் என்றால் என்ன என்று விளக்கம் கொடுக்க தேவையில்லாத அளவிற்கு, இன்று இணைய உலகம் வளர்ந்துவிட்டது என்று, எனக்கும், உங்களுக்கும் நன்றாகவே தெரியும்.           
இணையதளம் வைத்திருப்பது எல்லாம் அனாவசியம் என்பது போய் அத்தியாவசியம் என்றாகிவிட்ட நிலையில் இணையதள வடிவமைப்பு துறை ஏறுமுகத்தில் ராக்கெட் வேகத்தில் பறக்க தொடங்கியிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் முக்கிய நகரங்கள் பலவற்றில்  இணையதள வடிவமைப்பு நிறுவனங்கள் பல தொடங்கபட்டிருக்கின்றன. இதனால் இந்த துறை சார்ந்த வேலை வாய்ப்புகளும் பெருகியுள்ளன. சமீப காலங்களில் ஏற்பட்ட இணைய வளர்ச்சிக்கு சமுகவலைதளங்களை முக்கிய காரணங்களாக சொல்லாம். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக முதல் நாள் பேஸ்பூக்கில் பதிவேற்றிய படத்திற்கு எத்தனை பின்னுட்டங்கள், விருப்பங்கள் வந்துள்ளன என்பதை தான் பார்க்கிறோம். அதன் பின்னர்தான் மற்ற வேலைகள் எல்லாம். 
வோர்ட்பிரஸ்.காம் Vs வோர்ட்பிரஸ்.ஓஆர்ஜி (org)
பெரும்பாலனவர்களுக்கு இந்த இரண்டு தளங்களை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வோர்ட் பிரஸ்.காம், வோர்ட்பிரஸ்.ஓஆர்ஜி இந்த இரண்டு தளங்களும் ஒரே நிறுவனத்தை சேர்ந்தவைதான் என்றாலும், வசதிகளும், தன்மைகளும் கொஞ்சம் மாறுபடும்.
ஒரே வரியில் சொல்லப்போனால் வோர்ட் பிரஸ்.காம், ப்ளாக் (Blog) என்று சொல்லப்படுகின்ற இலவச வலைபூக்களை நிர்வகிக்க கூடியது. (கூகிள் பிளாக்கர் போன்றது). வோர்ட்பிரஸ்.ஓஆர்ஜி முழு இணையதளங்களை நிர்வகிக்ககூடியது.    
வோர்ட் பிரஸ்.காம் முற்றிலும் இலவசம். இதன் மூலம் உருவாக்கப்பட்ட தளங்களை நிர்வகிக்க நீங்கள் ஒரு பைசா கூட செலவு செய்யவேண்டாம். வோர்ட் பிரஸ் மென்பொருளை நீங்கள் தரவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இந்த தளத்தை அனைவரின் பார்வைக்கு கொண்டுவர ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயரை நீங்கள் காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இவை எல்லாவற்றையும் வோர்ட் பிரஸ்.காம் பார்த்துக்கொள்ளும்.
உங்கள் மின்னஞ்சல் முகவரி மட்டும் கொடுத்து உள்நுழைந்து கொண்டால் போதும். நேராக சென்று பதிவுகளை பிரசுரிக்கும் வேலைதான் உங்களுக்கு. குறிப்பிட்ட எண்ணிகையில் உள்ள வோர்ட்பிரஸ் வார்ப்புருக்களை உங்கள் ப்ளாக்கில் (Blog) நிறுவிக்கொள்ளலாம். 
வோர்ட்பிரஸ்.காம் மூலம் இயங்கும் தளங்களை ஆங்கிலத்தில் வோர்ட்பிரஸ் ஹோஸ்டட்டு வெப்சைட் என்று சொல்வார்கள். (Wordpress Hosted Website)
இப்படி வசதிகளை கேட்டவுடன் வோர்ட்பிரஸ்.காம்- லயே நாம் இணையதளம் ஆரம்பித்துவிடலாம் என்று நினைகிறீர்கள் தானே ? ஒரு நிமிடம் பொறுங்க.. இதையும் நான் சொல்லிவிடுகிறேன்.   
முதலில் உங்கள் தளத்தின் பெயரை mywebsite.com என்று நீங்கள் வைத்துக்கொள்ள விரும்பினால், வோர்ட்பிரஸ்.காமில் அது முடியாது. உங்கள் அனுமதி இல்லாமலயே Wordpress.com என்று உங்கள் டொமைன் பெயருக்கு பின் பகுதியில் தானாகவே சேர்ந்துகொள்ளும். உங்கள் தளத்திற்கு வருகை புரிய நினைக்கும் பார்வையாளர் ஒருவர்  mywebsite.wordpress.com என்று இணைய உலவியில் தட்டச்சு செய்துதான் உங்கள் தளத்திற்கு வருகை தர முடியும். 
என்று விவரமான விளக்கம் தந்து நம்மையே தேர்ந்தெடுக்க குணசீலன் வாய்ப்பளிக்கிறார். 
இந்த நூலைப் பொறுமையாக ஒன்றுக்குப் பத்து முறை வாசித்து, கூடவே ஒரு மடிக்கணினி அல்லது மேஜைக்கணினி வைத்து ஸ்டெப் பை ஸ்டெப் பயிற்சி செய்து பார்ப்போர் நிச்சயம் ஒரு தனித் திறமையை எட்டுவர்.
வெறும் ரூ.100/- விலையில் இப்படி ஓர் அற்புதமான தொழில்நுணுக்கப் பயிற்சி 
ஏட்டை வெறும் லாபம் நோக்கம் கருதாமல் தங்கள் தனித்த தொழில் நேர்த்தியுடன் வெளியிட்டிருப்போர் 
நர்மதா பிரசுரம் 
10, நாணா தெரு,
தி.நகர், சென்னை-600017
தொ.பே. எண் 24334397











Friday 8 July 2016

டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் அனுபவச் சுவடுகள்


அனுபவச்   சுவடுகள் நூல் முகப்பு
டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன்  (1937) திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர், இளம் வயதில் ஏழ்மைச் சூழலில், தன் அஸ்திவாரப் பருவத்தின் 10 ஆண்டுகள் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தின் கொடை நிழலில் வளர்நதவர். இந்திய அரசுப் பணியில் (IRAS) 15 ஆண்டுகளும் (1960-1975) ஆசிய வளர்ச்சி வங்கியில் 22 ஆண்டுகளும் (1975-1998) பணிபுரிந்து, ஓர் இயக்குநராகப் பணி ஓய்வு பெற்றார்.
1998 ஆம் ஆண்டு தாய்நாடு திரும்பியதிலிருந்து இலக்கிய, சமூகப் பணிகளில் ஈடுபாடு கொண்டுள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். இவற்றில் நாவல்கள், குறு நாவல்கள், சிறுகதை / கட்டுரை / கவிதைத் தொகுப்புகளும் அடங்கும். இலக்கிய சமூக, வளர்ச்சிக் களன்களைத் தழுவிய இவரது தமிழ்க்கட்டுரைகள் ஏழு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.
பாரத் ரத்னா சி. சுப்பிரமணியம் அவர்கள் நிறுவிய தேசிய வேளாண் நிறுவனத்திலும் தமிழ் மொழி / பண்பாட்டு ஆய்வுமையமான மொழி அறக்கட்டளையிலும் அறங்காவலராகப் பணியாற்றி வருகிறார். சாகித்ய அகாதமியின் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.


உள்ளத்தை உருக்கும் ஒரு சில நினைவுகள் 
இல்ல நினைவுகள்
-------------------------
என் வாழ்வின் அடித்தளமாக விளங்கும் இரண்டு சக்திகளை நான் மன நெகிழ்வுடன் நினைக்காத நாளே இல்லை ஒன்று என் தாயார்; இரண்டு, என் வாழ்வின் நாற்றங்கால் பருவத்தில் என்னுடைய கல்விக்கும், ஆளுமை வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைத்த ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம்.
1948. இல்லத்தில் முதல் ஆண்டு, நான் பத்து வயது சிறுவன். அது டுமையான ரேஷன் காலம். பொதுமக்களின் தர்மத்தின் அடிப்படையில் இயங்கி வந்த இல்லத்துக்கு மிகவும் நெருக்கடியான நாட்கள். நூறு வளரும் பருவத்துச் தசிறுவர்களைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு. உலைக்களத்தில் இட்ட கரி….உண்ட உணவைச் செரித்து அடுத்த உணவுக்குத் துடிக்கும் பருவம். நான்கு ஆண்டுகள் இந்தச் சவாலைச் சந்தி…….இல்லம் எவ்வாறு திணறியது என்பதை இன்று நினைத்துப் பார்க்கம்போதும் வியப்பும், பிரமிப்பும் மேலிடுகிறது.
ஆனால் அந்த நாட்களிலோ ஒவ்வொரு நேர உணவுக்குப் பிறகும் ஓர் ஊமைப் பசி உடலிலே நெருடும். மதிய, இரவு உணவின் போது நிறைய நீர்த்த மோரைக் குடிப்பதை இப்பசியை ஏமாற்றும் தந்திரமாக நாங்கள் பரவலாகக் கையாண்டோம். அன்றும் சரி, இன்றும் சரி இந்த அனுபவம் குறித்த ஒரு கைப்புணர்வு தீண்டியதே இல்லை. பெரும் மயற்சியுடனும், ஈடுபாட்டுடனும் ஒரு பெரிய நெருக்கடியை இல்ல நிர்வாகிகள் சந்தித்தனர். நம்மை எல்லாம் கட்டிக் காத்தனர் என்ற நன்றி உணர்வே மிஞ்சுகிறது.
மேற்கூறிய அனுபவம் மூலம் என்னுள் ஓர் ஆழமான தாக்கம் அன்னம் ந நிந்த்யாத் - உணவை நிந்தனை செய்யாதே (பழிக்காதே) - என்ற வேத வாக்கின் பல பரிமாணங்களை சுவீகரித்துக்கொண்டுள்ளேன்.   இது பல உருவங்களில் வெளிப்படுகிறது. தேவைக்கு மீறி உண்ணுதல்;  தேவைக்கு அதிகமாக உணவைக் கலத்தில் பறிமாறிக்கொண்டு, பிறகு விரயம் செய்தல்; திருமணம் போன்ற சடங்குகளிலும், பார்ட்டிகளிலும் உணவு வகைகள் வீணாகும் அசிங்கம்; உணவு என்ற புனிதத்தை ஆடம்பரத்தின் ஒரு சின்னமாக வடுப்படுத்துதல் - இவை அனைத்தும் என்னிடத்தில் ஒரு வகையான அருவருப்பையும், கோபத்தையும் இன்றும் ஏற்படுத்துகின்றன.
ராமகிருஷ்ணா இல்லம் என்னில் பல நிலையான தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அவற்றில் முக்கியமானது செல்வம் / ஏழ்மை பற்றிய என் கண்ணோட்டம். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர், சுவாமி விவேகானந்தர் அருள் வாக்குகளின் செல்வாக்கினாலோ, இல்லத்தின் ஆரோக்கியமான சூழலினாலோ இந்தத் தாக்கம் நிகழ்ந்திருக்க வேண்டும். அந்த இளம் பருவத்திலேயே எனது ஏழ்மையைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை என்னைத் தீண்டியதே இல்லை. ஒரு சிறுவன் ஏழையாக இருப்பதோ அல்லது செல்வச் செழிப்பு உள்ளவனாக இருப்பதோ ஒரு genetic lottery தான் (தாய் தந்தையரின் செல்வச் செழிப்பு அல்லது வறுமை சார்ந்த விளைவு) என்ற விவேகம் அந்தச் சிறு வயதில் எனக்கு வாய்த்ததை இன்று எண்ணிப் பார்த்தாலும், எனக்கு ஆச்சரியம் மேலிடுகிறது. இந்தப் பின்புலத்தில் செல்வந்தர்கள்பால் அதீத மரியாதை உணர்வோ பொறாமையோ என் உள்ளத்தை வடுப்படுத்தியது இல்லை. இந்தப் பக்குவம் இல்லம் எனக்கருளிய கொடை என்று நன்றி உணர்வுடன் பின்னோக்கிப் பார்க்கிறேன்.
இல்லத்தில் வாழ்ந்த முதல் மூன்று ஆண்டுகளில் நொறுக்குத் தீனிக்காக, எனக்கு நானே அருளிக்கொண்ட வாராந்திர பட்ஜெட் காலணா (ஒரு ரூபாயில் 64ல் ஒரு பாகம். திங்களும் வெள்ளியும் பொன்னாட்கள். மாலையில் விளையாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் திருட்டுத்தனமான எந்த மாணவனும் என்னைப் பின் தொடரவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு ஆத்தூர் கிராமத்துக் கடைப் பகுதிக்குச் செல்வேன். பயண இலக்கு கமர்கட்டு. ஒரு பாட்டி ஒரு நசுங்கிய அலுமினியத் தட்டில் கமர்க்கட்டைப் பரப்பி வைத்திருப்பார்கள். கன்னங்கரேலென்று இருக்கும். ஈக்களால் ஆன கம்பளம் கமர்க்கண்டு உருண்டைகளைப் பரிவுடன் போர்த்தி இருக்கும். என்னைக் கண்டவுடன் வா தம்பி என்று அன்படன் வரவேற்பார்கள் பாட்டி. திங்கள் கிழமை காலணா கை மாறும் இரண்டு கமர்க்கட்டுகளுக்கான விலை. ஒரு வாரத்திற்கான முதலீடு - திங்கள் ஒரு கமர்க்கட்டு, வெள்ளி ஒன்று. கமர்க்கட்டை உடனே கடித்துச் சாப்பிட மாட்டேன். அரை மணி நேரத்துக்கு மேல் குதப்பி, ரசித்து இனிப்பு சாயலுள்ள உமிழ்நீரை விழுங்குவேன்.
ஒரு மாலை நேரம். எனது கண்ணாமூச்சி வளையாட்டில் தோல்வி. என்னுடைய நண்பன் ஒருவனுக்கு மூக்கில் வியர்த்துவிட்டது. அங்குமிங்கும் பார்த்துக்கொண்டு நான் கடை நோக்கி செல்லும்போது, யாரோ பின்தொடர்ந்து வருவது போலக் குறுகுறுப்பு. திரும்பிப் பார்த்தால், ஓர் ஒற்றன் போல் அந்த நண்பன். சுதாரித்துக்கொண்டேன். ஒரு வியூயகம். அவனை ஆரவாரத்துடன் அழைத்து, ஆற்றங்கரைக்குப் போகலாமே என்று பாலாறு ஆற்றுக்கு அவனுடன் சென்றேன். அன்று எனக்கு கமர்க்கட்டு பட்டினி. நான்கு ஆண்டுகளாக என்னை விடாமல் துரத்தியது. பல தருணங்களில் அனைத்து பள்ளி மாணவர்களும் குழுமியுள்ள கூட்டங்களில், என்னை நிற்க வைத்து ரங்க ஐயங்கார் அவர்கள். இவன் சுவாமிக்காக வெச்சிருந்த முந்திரிப் பருப்பைத் திருடினவன் என்று பிரகடனம் செய்வார். முதலில் வெட்கி, வருந்தி, என்னுள் உடைந்து போனேன். பிறகு மரத்துப் போய்விட்டது.
பள்ளி இறுதிப் பொதுத் தேர்வு முடிந்துவிட்டது. இல்லத்தைவிட்டு தத்தம் வீட்டுக்கும், எதிர்காலம் என்ற கேள்விக்குறியை நோக்கியும் செல்லும் நேரம். தலைமை ஆசிரியர் ரங்க ஐயங்கார் என்னைக் கூப்பிட்டு அனு்பபினார். நீ படிப்பிலயும், நடத்தையிலயும் நன்னாவே பண்ணியிருக்கே. School Pupil Leader பொறுப்பிலயும் நல்ல வேலை பண்ணியிருக்கே. பப்ளிக் எக்ஸாம்லேயும் ஸ்கூல்லே முதலா வருவாய்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. மைலாப்பூர்ல ஹோமுடைய காலேஜ் ஸெக்ஷன் இருக்கு. தெரியுமோன்னோ? அதுலே ஒன்னெ சேத்துக்கணும்னு எழுதப்போறேன்” என்றார். அவர் பரிவில் நான் நெகிழ்ந்த போனேன். நான்கு ஆண்டுகளாக என் இளம் உள்ளத்தை எவ்வாறு புண்படுத்தியுள்ளார் என்பதை அவரிடம் சொல்லிக்காட்ட வேண்டும் என்ற என் திட்டம் இடம் தெரியாமல் மறைந்தது.
இன்னோர் ஆசிரியர் 10-11ஆம் வகுப்புகளில் ஸோஷியல் ஸ்டடீஸ் பாடம் கற்பித்த எஸ் எஸ் கிருஷ்ணசாமி அய்யா எடுத்துக்கொண்ட பாடங்களை மிகவும் தெளிவாக, அழகாக சுவையாகக் கற்பிக்கும் ஆற்றல் பெற்றவர். ஆன்மிக இலக்கிய கருவூலங்களில் - தமிழ், சமஸ்கிருதம், ஆங்கில மொழிகளில் நல்ல தேர்ச்சி உள்ளவர். ஆரவாரமின்றி, நயம்படப் போதிப்பதில் திறம் மிக்கவர். அவர் கூறுவார்:
இங்கே பாருங்கோ குழந்தைகளா! உங்களுக்கு ஸோஷியல் ஸ்டடீஸ் கத்துக் கொடுக்க எனக்குச் சம்பளம் தரா. அதைச் சொல்லிக் கொடுத்துடறேன். பரீக்ஷைக்கு பிரயோஜனமா இருக்கும் ஆனா எனக்கும் ஆத்ம திருப்தின்னு உண்டோன்னோ. நீங்களும் நல்ல மனுஷாளா வளரணுமோன்னோ.  அதனாலே, பாடத்துக்கு 25 நிமிஷம்: அதுவே ஜாஸ்தி 15 நிமிஷம் ஒங்க வாழ்நாள் பூரா உபயோகமாகிற நல்ல விஷயங்கள்”. இந்த அணுகுமுறையை மிகவும் அழகாகச் செயல்படுத்துவார். திருக்குறள், தேவாரம் திவ்யப் பிரபந்தம், வள்ளலார், பாரதியார், பகவத்கீதை, உபநிடதம், ஷெல்லி, தாகூர் - இந்த விருந்து ஒவ்வொரு நாளும் கால்மணி நேரம். அற்புதமான ஆளுமை வளர்ச்சிப் படையல்கள்.
மைலாப்பூர் ராமகிருஷ்ணா ஹோமில் இருந்தபோது என்னைப் போன்ற சில மாணவர்களுக்கு அவ்வப்போது கூரியர் வேலை வரும். தபால் செலவைக் குறைப்பதற்கான சிக்கன உத்தி. முக்கியமாக, அழைப்பிதழ்களை விநியோகம் செய்யும் வேலை. பெரும்பாலும் மேல்தட்டுப் பிரமுகர்களின் வீடுகளுக்கு, பல நிகழ்வுகளுக்கு அழைப்பிதழ்கள் இருக்கும் - ஹோம் ஆண்டு விழா, நவராத்திரி நிகழ்வுகள், ராமகிருஷ்ணர்/ சாரதாமணி/ விவேகானந்தர் ஜெயந்தி… என்னுடைய பொறுப்பு வட்டம் மைலாப்பூர் - எட்வர்ட் எலியட்ஸ் சாலையும் (இப்போது ராதாகிருஷ்ணன் சாலை) அந்தச் சாலையிலிருந்து பிரியும் தெருக்களும், லஸ் சர்ச் சாலையும் அதைச் சுற்றி உள்ள தெருக்களும். எட்வர்ட் எலியட்ஸ் சாலையில் உள்ள பங்களாக்களின் பெயரும், அதில் வசிக்கும் குடும்பத் தலைவர் பெயரும் எனக்கு அத்துபடி. பங்களா கேட்டை ஒட்டிய மர/ பளிங்குப் பலகைகளில் எழுதப்பட்டு இருக்கும். தினமும் காலேஜ் 4 மணிக்கு முடிந்தவுடன், மெரினாவில் உள்ள ப்ரெஸிடென்ஸி காலேஜிலிருந்து, மைலாப்பூரில் விவேகானந்தா காலேஜ் அருகில் உள்ள ராமகிருஷ்ணா ஹோம் வரை நடந்து தான் வருவேன். பஸ் கட்டணத்துக்கு வசதி இல்லாததால். எட்வர்ட் எலியட்ஸ் சாலையில் நடக்கும்போது, அடுத்த பங்களாவின் பெயரைச் சொல்லிக்கொண்டு, அதை சரி பார்த்து வெற்றிக் கிளுகிளுப்பை அடைவது நடையின் சோர்வைக் குறைக்கும். பிறகு இந்த விளையாட்டும் சலித்துவிடும், தோல்விக்கே வாய்ப்பில்லாததால் ஒரு ஞாயிற்றுக்கிழமை, கையில் ஒரு கட்டு அழைப்பிதழ்களுடன் ஒரு பங்களாவில் நுழைந்தேன். ஏழ்மை முத்திரை பதித்த உருவத்துடன், காலிங் பெல்லைத் தயக்கத்துடன் அழுத்தினேன். ஓர் இளம் பெண் கதவைத் திறந்து, ஓர் அலட்சியப் பார்வையையும், ஒரு கேள்விக் குறியையும் என்மேல் எறிந்தாள். காலேஜில் அவளைப் பார்த்த ஞாபகம். “நான் ராமகிருஷ்ணா ஹோம்லேருந்து வரேன். இந்த இன்விடேஷனைக் கொடுக்க வந்திருக்கேன் என்றேன். ஒய்யாரமாக அதை வாங்கிக்கொண்டு டபால் என்று கதவை மூடிவிட்டு. வீட்டுக்குள் மறைந்து விட்டாள். நம்ப ஹோமுக்காக இதைப் பண்ணறோம். இதுல ஈகோ பிரச்சனையே இல்லை என்று எண்ணிக்கொண்டு ஒரு புன்சிரிப்புடன் அடுத்த முகவரியைப் பார்த்து நகர்ந்தேன்.
ஒரு வருஷத்துக்குப் பிறகு அப்போது நான் காலேஜ் யூனியன் ப்ரெஸிடெண்ட். அழைப்பிதழ்கள் கட்டுடன் அதே பங்களாவுக்குள் நுழைகிறேன். அதே பெண் கதவைத் திறந்துகொண்டு வெளியே வருகிறாள். என்னைப் பார்த்தவுடன் முகமெல்லாம் பல், ப்ளீஸ் கம் இன் என்று உள்ளே அழைக்கிறாள். “அப்பா, இது மிஸ்டர் சுப்ரமணியன். எங்க காலேஜ் யூனியன் ப்ரெஸிடெண்ட். பேச்சுப் போட்டிகளில் நெறய ப்ரைஸ் வாங்கி இருக்கார்” என்று சோபாவில் உட்கார்ந்திருந்த அப்பாவுக்கு குதூகலமான அறிமுகம். நான் பவ்யமாக நின்றுகொண்டே, “நான் ராமகிருஷ்ணா ஹோம்லேருந்து வரேன். இந்த இன்விடேஷனைக் கொடுத்துட்டுப் போக வந்திருக்கேன்” என்று ஒரு அழைப்பிதழை அவரிடம் கொடுத்துவிட்டு மரியாதையுடன் அங்கிருந்து கிளம்பினேன்.



கவிதா வெளியீடு பின்னட்டை

 னிதர்களை நினைவுகூர்தல் மிக இயற்கையாக நிகழ்கிறது என்பதுதான் இந்த நூலின் பெரிய பலம். இன்னும் கொஞ்சம் சொல்ல மாட்டீர்களா என எண்ணும் நேரத்தில் புத்தகம் முடிந்துவிட்டது.
அத்தைக்கு நானும் ஒரு கொழந்தை. அந்தத் திருடனும் ஒரு கொழந்தைதான். மாபெரும் வாக்கியம் போல என் மனத்தில் இது இடம்பெற்றுவிட்டது. தனக்குக் கொடுத்த பாலை, தான் பாதி மட்டும் குடித்துவிட்டு நாய்க்குட்டிகளுக்கு மீதியைப் பகிர்ந்துகொள்ளும் சாலையோரத் தாயும் வாழ்க்கையையே செய்தியாக வாழ்பவள்தான். கல்லூரிப் படிப்புக்கு வழிகாட்டும் ரங்க ஐயங்கார் சித்திரம் அருமை.  ஆங்கிலம் தெரியாத கண்ணுச்சாமி, வெளிச்சத்தை உருவாக்கிக் கொள்ளும் கந்தசாமி, சந்துருவின் மனைவி, மகள் எனப் பலவகையான மகத்தான மனிதர்களை இந்தச் சுவடுகள் வழியாக நான் அறிமுகம் செய்துகொண்டேன்.

(பாவண்ணனின் கடிதத்திலிருந்து)

Saturday 2 July 2016

கானகன்



இளம் எழுத்தாளர் லட்சுமி சரவணக்குமார் எழுதிய, கானகன் என்ற இந்த நாவல். முழுக்க காடு மற்றும் வேட்டையைப் பற்றி வெளிவந்த நாவல் இது. வேட்டையாடுதல் தொடர்பான நூல்கள், தமிழில் மிகக் குறைவு. 1950களில் ஜிம் கார்பெட் எழுதிய வேட்டை தொடர்பான நூல்கள்தான் இங்கு பிரபலமாக இருந்தன. இந்நிலையில் கானகன் நாவல் முக்கியத்துவம் பெறுகிறது. வேட்டைக்காரனின் மனநிலை, வேட்டையாடும் முறை ஆகியவற்றோடு, அன்றாடம் மனித வாழ்க்கையில் நடக்கும் வேட்டையை ஒப்பிட்டு கதை செல்கிறது. கதையின் நாயகன் தங்கப்பன், புலி ஒன்றை வேட்டையாடுவதிலிருந்து நாவல் துவங்குகிறது. மூன்று குட்டிகளை ஈன்ற, புலி தண்ணீர் குடிக்க வரும்போது, அதை ஈர்க்க ஆட்டை மரத்தில் கட்டி வைத்து, அதை நோக்கி புலி வரும்போது, சுட்டுக் கொல்கிறான். கேரம் விளையாட்டில், ஒரு காயை பாக்கெட் செய்யும்போது ஏற்படும் திரில் போல மிருக வேட்டையை ஒப்பிடுகின்றனர். இப்படியாகச் செல்லும் கதையின் கடைசி கட்டத்தில், தங்கப்பன் எந்த புலியைச் சுட்டுக் கொன்றானோ, அந்தப் புலியின் குட்டியால் கொல்லப்படுவதோடு கதை முடிகிறது. தங்கப்பனை பழிவாங்க, இந்த சம்பவம் நடக்கவில்லை. வேட்டையின்போது இயல்பாக நடக்கும் சம்பவமாகவே, தங்கப்பன் கொல்லப்படுகிறான். 

லட்சுமி சரவணக்குமார்
காட்டில் வாழும் எந்த மிருகமும் இயல்பாக சாவதில்லை. அது பழம் இழக்கும்போது, மற்றொரு மிருகத்தால் கொல்லப்படுகிறது. குறிப்பாக புலி வயதாகும்போது மற்றொரு புலியால்தான் கொல்லப்படுகிறது. அதுபோலவே, வேட்டையாடுதலையே வாழ்க்கையாகக் கொண்ட தங்கப்பனிடம், மென்மையான உணர்வு, இரக்கம் போன்றவை வற்றிப்போய், காட்டில் வாழும் மனித மிருகமாக மாறுகிறான். வேட்டையாடுதலை இரக்கமற்ற சொலை என்பதை மறந்து, அதை ஒரு தீரச் செயலாக பார்க்கின்றனர். இங்கு கருணைக்கு இடமில்லை. இயல்பான வாழ்க்கையிலும், தேவைகளுக்காக போராடத் துவங்கும் மனிதன், தன் தேவைகளை பூர்த்தி செய்து கெள்வதற்கு எதையும் செய்கிறான். அதைத் தான் வாழ்வின் வெற்றியாகவும் கருதுகிறான். இங்கும் வெற்றியைத் தவிர மற்றவைக்கு இடமில்லை. இதை சிறப்பாகப் படம்பிடித்து காட்டுகிறது கானகம் நாவல். 2016 ஆண்டிற்கான சாகித்திய அகா​​​​தெமி யுவபுரஸ்கார் விருதி​னை இந்த புத்த்கத்திற்காக திரு லக்ஷ்மி சரவணகுமார் அவர்களுக்கு கி​​டைத்துள்ளது
ரூ.200 விலையுள்ள இந்த நூல்  தி.நகர் நியூ புக்லண்ட்ஸ்  [பேஸ்மெண்ட்]கடையில் கிடைக்கும் 
முகவரி:No-52-C,Basement, North Usman Road, Near Panagal Park Flyover North End, Thiyagaraya Nagar, Chennai, Tamil Nadu 600017
.

Saturday 25 June 2016

அலிபாபாவும் 40 திருடர்களும்

நமக்கு நன்றாகத் தெரிந்த அதே அலிபாபாவும் 40 திருடர்களும் கதை தான். ஓவியர் தமிழின்  அருமையான சித்திரங்களுடன் மிகவும் குறைந்த விலைக்கு தாரிணி பதிப்பகத்தார் இதை சிறப்புற வெளியிட்டுள்ளார்கள்.பக்கத்திற்குப் பக்கம் சிறுவர் முதல் பெரியவர் வரை அலுப்பு சலிப்பின்றிபடித்த கதை தானே என்று உதாசீனம் செய்வதற்கே  இடம் தராமல் கதையை சொல்லிச் செல்கிறார் ஜெயதாரிணி.
முகவரி.
Dharini Padhippagam,                                                                                    
32/79 Gandhi Nagar 4th Main Road
Adyar, CHENNAI-600020
PH.24400135
Mobile:9940120341

கணிதத்தைச் சமையல் செய்வது எப்படி?


கணிதத்தைச் சமையல் செய்வது எப்படி?
இப்படிக்கூடச் சொல்லலாம். கணித ரீதியாகச் சமையல் செய்வது எப்படி?சிகாகோ கலைக் கல்லூரியில் கணிதப் பேராசிரியருக்கு என்ன வேலை? ஓவியமும் சிற்பமும் வடிப்பவர்களுக்கும் கணக்கு வாத்தியாருக்கும் என்ன சம்பந்தம்? அதை விளக்கத்தான் யூஜினியா செங் வந்திருக்கிறார்.
திட்டவட்டமான உருவமற்ற கற்பனையான விஷயங்களை அருவமாக உணர்ந்து அப்பூதியாக புரிந்துகொண்டு எண்ணமாக உருவாக்குபவர்கள் “கலைஞர்கள்”. அதே போல் திட்டவட்டமாக வகுக்கமுடியாத விஷயங்களுக்கு ஒரு பகுப்பு கொடுத்து, அதை விளக்குபவர்கள் “கணிதயியலாளர்கள்”. லண்டனில் இருக்கும் புனித பால் தேவாலயத்தில் (செயிண்ட் பால் கதீட்ரல்) எவ்வாறு கணிதம் பங்களிக்கிறது என்பதையும் மாரத்தான் ஓட்டத்தில் கணக்கு எப்படி முக்கியம் என்பதையும், தக்காளியை ஏன் காய்கறியில் சேர்க்கிறோம் என்பதையும் πயை எப்படி உண்டாக்குவது – கணிதத்தின் கணிதம் குறித்து உணவு வழி ஆராய்ச்சி (How to Bake Pi: An Edible Exploration of the Mathematics of Mathematics) நூலில் அறிமுகம் செய்கிறார்

.
கணிதத்தைக் குறித்து இருக்கும் நம்பிக்கைகளை முதலில் பார்ப்போம்:
கணக்கு என்பது எண்களும் எண்கள் சார்ந்தவையும்
செல்பேசி என்பது நண்பருடன் பேசுவதற்கானது மட்டுமே என்று நம்புவதைப் போல், இந்த நம்பிக்கை முட்டாள்தனமானது. செல்பேசியில் மற்றவரை அழைக்கலாம்; உரையாடலாம். அதில் விளையாடவும் செய்யலாம். கூடவே, மின்னஞ்சல் அனுப்பலாம்; பாட்டு கேட்கலாம். அதே போல் கணிதம் என்பது எண்களை வைத்து கணக்குப் போடுவதற்கும் பயன்படும்; ஆனால், அது தவிர நூற்றுக்கணக்கான மற்ற விஷயங்களையும் கொண்டிருக்கிறது.
கணக்கு என்பது சரியான விடையைப் பெறுவது
விளையாட்டில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக விளையாடுகிறோம் என்பது சொல்வது போல் இது இருக்கிறது. ஆட்டம் ஆடும்போது வெல்லத்தான் எண்ணுகிறோம். ஆனால், வெற்றியை விட, நண்பர்களுடன் ஓடியாடி ஆடுவது முக்கியம். உடற்பயிற்சியை ஊக்கத்துடன் செயலாற்றுவது அதனினும் முக்கியம். அடுத்த முறை, அதே ஆட்டத்தை, இன்னொரு இடத்தில் ஆடும்போது — திறன்பட விளையாட, புதிய நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வது முக்கியம். எதைச் சரியாக செய்தோம், எங்கே இன்னும் நன்றாக ஆடலாம் என்று புரிந்து கொள்ளும் வழிமுறையை அறிவது இன்னும் முக்கியம். 
கணக்கு என்பது சரி அல்லது தப்பு என்பதைக் குறித்தது
துணியைத் தைப்பதற்குக் கொடுக்கிறோம். தையற்காரரும் அதைத் தைத்துக் கொடுக்கிறார். சில சமயம் சரியாக அமைவதில்லை. ஒழுங்காக இல்லை எனப்படும் ஆடை, சில சமயம் நாகரிகமாகிவிடும். பெல்பாட்டாம் என்னும் தொள தொளா கால்கள் கொண்ட காற்சட்டை, ஒரு காலத்தில் சரியானதாக இருந்தது. இப்பொழுது தவறாக இருக்கிறது. முட்டியில் கிழிந்த கால்சட்டைகள், ஒரு காலத்தில் நகைப்புக்கு உள்ளாகியது. இப்பொழுதோ, புத்தம்புதிய ஜீன்ஸ் வாங்கி, கால் முட்டியைக் கிழித்துக்கொள்வது சரியான விஷயமாகி இருக்கிறது. கணக்கிற்கே வருவோம். 10 + 4 = 2 என்று சொன்னால் தப்பு என்போம். ஆனால், அதே கணக்கை, கடிகாரத்தில் போட்டால், பத்து மணியோடு நான்கு மணி நேரத்தைக் கூட்டினால், மதியம் இரண்டு வருகிறதே!
’கூட்டிக் கழித்துப் பார்… கணக்கு சரியாக வரும்’ என்று அண்ணாமலை திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் தொழிலதிபர் இராதாரவி இதைத்தான் சொன்னாரா?
நீங்கள் கணிதவியலாளரா? அப்படியானால் புத்திசாலியாகத்தான் இருப்பீர்கள்!
இது எப்படி இருக்கிறது என்றால், கம்ப்யூட்டரில் வேலை செய்வோர் எல்லாம் அறிவாளியாக இருப்பார்கள் என்று எண்ணுவதைப் போலத்தான் இருக்கிறது. கணினியில் புழங்குவது எளிமையானது. அதே போல் கணிதத்தில் உழல்வதும் சுளுவானதுதான். நான் பள்ளியில் படித்தபோது எந்த விளையாட்டிலும் மிளிர்ந்தது கிடையாது. ஏனென்றால், விளையாட்டில் பங்குபெறுவோர் படிப்பில் பரிமளிக்கக் கூடாது என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. இரண்டாவது விதியாக, விளையாட்டில் பங்குபெற ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டிருக்கவேண்டும் என்று கருதப்பட்டது. ஆனால், இது எல்லாமே கட்டுக்கதை. இப்பொழுது கூட நான் தினசரி ஐந்து கிலோமீட்டர் ஓடுகிறேன். உடல் பயிற்சியில் உற்சாகமாகப் பங்குபெறுகிறேன். ஆனால், அமெரிக்க கால்பந்து என்றால் காத தூரம் ஓடுகிறேன். அதாவது, திறன் வாய்ந்த உடல் பெறுவது என்பது விளையாட்டில் சாமர்த்தியசாலி என்பதோடு சம்பந்தப்பட்டது அல்ல. புத்திக்கூர்மை அதிகம் பெற்றவர்தான், கணிதத்தில் சிறந்து விளங்குவார் என்பதும் பொருத்தம் அல்ல.
கணிதத்தில் என்ன ஆராய்ச்சி வேண்டியிருக்கிறது! புதியதாக புத்தம்புதிய எண்ணைக் கண்டுபிடிக்க முடியுமா என்ன?
இந்தப் புத்தகம்தான் இந்தக் கேள்விக்கான விடை என்கிறார் யூஜினியா செங்.
உத்தியும் உத்தி சார்ந்த வழிகளும்
கணிதத்தைக் குறித்து விளக்க, இந்தப் புத்தகம் நெடுக சாப்பாட்டு விஷயங்களையும் கேக் வகையறாக்களையும் கையில் எடுத்திருக்கிறார் யூஜினியா செங். கடைக்குச் செல்கிறீர்கள். அங்கே புத்தம்புதிய மிக்ஸியைப் பார்க்கிறீர்கள். வாங்கியும் விட்டீர்கள். இப்பொழுது சட்டினி செய்து பார்க்கும் ஆவல் எழும். காலை எழுந்தவுடன் பழரசம் உண்பதற்கும் ஆசை பிறக்கும். வித விதமான துவையல் அரங்கேறும். சாதாரணமாகச் சப்பாத்தி செய்துவிட்டு, அதற்கு என்னத் தொட்டுக்கொள்ளலாம் என்று யோசிப்போம். ஆனால், மிக்ஸி கிடைத்தவுடன், அரைத்து விட்ட குழம்பு செய்துவிட்டு, சூப் போல் அதை உண்ண முடியுமா எனக் கூட யோசிப்போம்.
கணக்கும் இதே கதைதான். ஒரு உத்தியைக் கண்டுபிடிக்கிறோம். பிறகு, அதே உத்தியை வேறு எங்கெல்லாம் நுழைக்கலாம் என ஆராய்கிறோம்.
ஓவியங்களையே எடுத்துக் கொள்ளலாம். புள்ளிகளால் உருவாகும் ஓவியம் என்பார்கள்; சதுரமும் செவ்வகமும் கொண்டு உருவாகும் ஓவியம் என்பார்கள்; உணர்வுப்பதிவுவாதம் (இம்ப்ரெஷனிஸம்) என்பார்கள்; அதாவது, எந்த வழிமுறையைப் பயன்படுத்துகிறோமோ, அதைக் கொண்டு அந்த ஓவியத்தைச் சட்டகத்திற்குள் அடைக்கிறார்கள். என்ன வரைந்தார்கள், எதை உணர்த்துகிறார்கள், என்ன விஷயங்களை கோடிட்டுக் காட்டினார்கள் என்பதைக் கொண்டு அந்த ஓவியங்களை வகுக்கவில்லை.
தமிழ்ப்படங்களில் கூட இந்த வகுப்புமுறையை பார்க்கலாம். வடிவேலு வருகிறாரா… அப்படியானால் நகைச்சுவை காட்சி. சமந்தா வருகிறாரா… காதல் காட்சி. நாலைந்து அடியாள் காண்பிக்கப்படுகிறார்களா… அடிதடி சண்டைக் காட்சி. இந்த வட்டத்திற்குள்தான் சினிமா சுழல்கிறது. வில்லன் நடிகர்களுக்குள் காதல் மலர்வதில்லை.
இதற்குக் கணக்கில் தருக்கம் (லாஜிக்) என்று பெயரிட்டு இருக்கிறார்கள். பரிசோதனைகளை நம்புவதை விட, கள ஆய்வுகளில் காலம் செலுத்துவதை விட, கண்மூடித்தனமான நம்பிக்கைகளை விட, சுதந்திரமான மக்களாட்சியிலோ, வன்முறையிலோ இறங்குவதை விட அறிவுப்பூர்வமான ஏரணங்களை நிலைநாட்டுவதில் கவனம் கொண்டிருப்பது கணக்கு. இந்த நூலில் மூன்று விஷயங்களை அந்தக் கணக்கில் இருந்து எடுத்துக் கொண்டு விரிவாக ஆராய்கிறார்:
1. நுண்மமாக்கல் (abstraction) – எக்ஸ், ஒய் என்று எல்லாவற்றையும் சுருக்கி எண்ணமாக்கும் அல்ஜீப்ரா போன்ற கணக்கு
2. பொதுவாக்கல் (generalization) – உருண்டைக் குழம்பிற்கான உருண்டையும் மிக்ஸியில் இருந்து வரும்; குழம்பிற்கான விழுதும் மிக்ஸியில் இருந்து வரும். அதே போல், முக்கோணத்தில் இருந்து கூம்புகளும் வரும்; கோவில் கலசங்களும் தேவாலயங்களும் உண்டாகும்.
3. பகுப்பியல் கோட்பாடு (Category theory) – கணிதத்திற்கான கணிதம் என்கிறார். தருக்கத்தை நம்பி கணிதத்தின் பிழைப்பு ஓடுகிறது என்றால், அந்தக் கணக்கில் எந்த அடுக்குகள் முட்டுக்கொடுத்து கணிதத்தை நிலைநிறுத்துகின்றன என்று ஆராய்ந்து பகுத்தறியும் கலையின் படிப்பு.
தியாடோர் பாஸ்கரன் போல் பறவைகளின் மீது உங்களுக்குக் காதல் என்று வைத்துக் கொள்வோம். அதன் பழக்கவழக்கங்களை ஆராய்கிறீர்கள். என்ன சாப்பிடுகிறது, எப்பொழுது கண்டம் விட்டு கண்டம் தாவுகிறது, எப்படிக் கூடு கட்டுகிறது, எவ்வாறு இரை தேடுகிறது, எங்ஙனம் தன்னுடைய இடத்தைக் கண்டிப்பாக நிர்ணயித்து மற்ற ஜந்துக்களை அணுகாமல் அடைகாக்கிறது என்றெல்லாம் தெரிந்து கொண்டு இருக்கிறீர்கள். ஆனால், காகத்தில் இருந்து மயில் உண்டாக்க முடியாது. சிறிய பறவையில் இருந்து புத்தம்புதிய பெரிய பறவையை உருவாக்க இயலாது. இது ”பொதுவாக்கல்”.
அதே போல் ஒட்டகச்சிவிங்கியில் இருந்து வான்கோழியைப் படைக்க முடியாது. பறவையல்லாத ஜந்துவில் இருந்து மாயமந்திரம் செய்து பறவையைக் கொணர இயலவில்லை. இது ”நுண்மமாக்கல்”.
ஒன்று, இரண்டு, மூன்று என்றால் உங்களுக்குப் புரியும். அதே சமயம் ஆங்கிலேயருக்கு, ஒன், டூ, த்ரீ என்றால் மட்டுமே புரியும். இந்திக்காரருக்கோ, ஏக்,தோ, தீன் என்றால் விளங்கும். இதுவும் ஒருவகை ”நுண்மமாக்கல்”. இந்த மாதிரி சுவாரசியமான அன்றாட கணக்குகளையும் புரிதல்களையும் பளிச்சிட வைக்கிறார் யுஜினியா.
இந்தப் புத்தகத்தின் வெற்றி என்பது கணிதவியலாலர்கள் எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்று உணர்த்துவதில் இருக்கிறது. எந்தச் சூத்திரத்தை எவ்வாறு ஆராய்கிறார்கள் என்று நுணுக்கமாக விவரித்து கணிதப் புத்தகத்தில் மூழ்கடிக்காமல், கணித வழிமுறைகளை எண்ணுவதற்குப் பாதை காட்டி இருக்கிறார் யூஜினியா. இந்த மாதிரி கடினமான விஷயங்களை விளக்கும்போது, சாதாரணமாக நீர்த்துப்போகுமாறு விளக்குவதுதான் நிதர்சனம். நிறையப் புத்தகங்கள் விற்று, நியு யார்க்கர் போன்ற வணிக சஞ்சிகைகளில் இடம்பெறுவதற்கான சூத்திரமும் அதுவாகவே இருக்கிறது. ஏதாவதொரு சம்பவத்தை கதை போல் விளக்கி, அந்தப் புகழ்பெற்ற விஷயத்தை வைத்து, அறிவியலை எளிமையாக்கி பெஸ்ட்செல்லர் பட்டியலில் இடம்பிடிக்கலாம். இந்த மாதிரி போலி மாயாஜாலங்களில் யுஜினியா புகவில்லை. அவரோ கலைக்கல்லூரியில் கணிதம் பயிற்றுவிப்பவர். கேக் எப்படிச் செய்வது என்று சொல்லிக்கொண்டே கேக் சாப்பிடுவது போல் கணிதத்தின் நுணுக்கங்களுக்குத் தூண்டில் போட்டு அழைக்கிறார்.
நன்றி:சொல்வனம்