Saturday, 4 June 2016

தமிழ் இனி மெல்ல..


                                  தமிழுக்குத்  தமிழரிடமிருந்துதான்
                                 விடுதலை வேண்டும்
                                                 

                             முனைவர். திருமதி.ஜவாஹர் பிரேமலதா
                                              இணைப்பேராசிரியர்.(தமிழ்த்துறை)
                                    அரசு அறிவியல் கலைக்கல்லூரி, சேலம்-7(தன்னாட்சி)
                                                              [தொலைபேசி:9488417411]
ரிசோனா மகாதேவன் அவர்கள் புலம் பெயர்ந்த ஒரு தமிழர். தற்போது அரிசோனாவில் குடியேறி விட்டவர். குன்றாத தமிழ் உணர்வுடன் அங்கே ஆலயம் அமைத்து இடைவிடாது இயங்கிவருகிறவர்.
தமிழின் அருமையை பெருமையை அந்நிய சூழலில் உணர்ந்து தனக்கான அடையாளம் மொழியே என்பதை உணர்ந்து தான் உணர்ந்ததை தாய்நாட்டுத் தமிழருக்கும் எடுத்துரைக்க இந்நாவலைப்  புனைந்துள்ளார். உணர்வதை உணர்த்த நினைப்பதே ...அதுவும் சுவையாக ... ஒரு கதையாக ....உணர்த்த முயல்வதே .....இந்தப்  படைப்பின் முதல் வெற்றியாகிறது. வெற்றுரைகளாக இல்லாமல் மாபெரும் வரலாற்றை ஆழ்ந்து அறிந்து வலுவான ஆதாரங்களினடிப்படையில் தமிழ் இனி மெல்ல......என்ற நாவல் எழுதப்பட்டுள்ளது.
                                                                                                                                       
தமிழ் இனி மெல்ல..
து முன்னைப் பழைமைக்கும் பழமையான, பின்னைப் புதுமைக்கும் புதுமையான என்றுமுள தென் தமிழின்  முந்தைய வரலாற்றையும் எதிர்கால வரலாற்றையும் எடுத்துரைக்க தமிழில் வந்துள்ள நாவல்களிலிலேயே தனித்தன்மை வாய்ந்தஒரு நாவலாகும். தமிழ் நாவல்களில் பெண் விடுதலை,சமூகவிடுதலை இனவிடுதலை,சாதி விடுதலை என எத்தனையோ பாடுபொருள்களில் படைப்புகள் எழுதப்பட்டுள்ளன. சமூகத்தைப் பீடித்துள்ள பலச் சமூக விரோதப் போக்கை  நாவல்கள் சாடியுள்ளன. ஆனால் தமிழுக்கு எதிரான தமிழர்களின் விரோதப்போக்கை எந்த நாவலும் எடுத்துரைத்ததில்லை.
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் துப்பாக்கியோ, அணுகுண்டுகளோ தேவையில்லை.அந்த இனத்தின் மொழி அழிந்தாலே போதுமானது என்பதை நாவலாசிரியர் நிகழ்ச்சிகளின் வழியும் பாத்திரங்களின் வழியும் எடுத்துரைத்து எச்சரிக்கிறார்.
“தமிழ்ப் பள்ளிகள் ஊர்கள் தோறும் திறக்கவேண்டும். முதலில் சேரநாட்டிற்கும், பின்னர் சாளுக்கிய நாட்டிற்கும் தமிழ் ஆசிரியர்களை அனுப்பி குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுத்தர ஏற்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ் அறிந்தால் மட்டுமே அரசில் பணி கிடைக்கும் என்று அறிவிக்கவேண்டும். இந்த சட்டத்தைச் சோழப் பேரரசின் தலைசிறந்த சட்டமாக்கவேண்டும்.
தவிர வைணவர்களிடமிருந்தும் நாம் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது. வைணவக் கோவில்களில் வடமொழியில் பூசைகள் நடந்தாலும், தமிழ்ப் பிரபந்தங்களைப் பட்டாச்சாரியர்களே ஓதுகிறார்கள். சாற்றுமுறை என்று அதை மதிக்கிறார்கள். ஆக தமிழ் கருவறையில் திருமாலுக்கு அர்ப்பணமாகிறது. அப்படியிருக்க, சிவன் கோவில்களில் நாம் தமிழை கருவறைக்கு வெளியில் அனுப்பிவிட்டோம். ஓதுவார்கள் கருவறைக்கு வெளியில் நின்று தமிழ் வேதமாம் தேவாரத்தை ஓத ஆரம்பித்திருக்கிறார்கள், அதுவும் நீ ஆணையிட்ட பின்னர். இது ஏன்? சிவாச்சாரியர்களே ஏன் தேவாரத்தை ஓதக் கூடாது? திருமால் ஏற்றுக்கொள்ளும் தமிழை தென்னாடு மற்றுமின்றி என்னாட்டவர்க்கும் இறைவனான முக்கண்ணன் ஏற்கமாட்டாரா? யோசித்துப் பாருங்கள்.”
  இது நாவலின் ஒரு பகுதி.....இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நிலை.இப்படியெல்லாம் தமிழ் சோழர்களால் வளர்க்கப்பட்டுள்ளது. பிற மொழி பேசும் நாடுகளிலும் தமிழ் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   ஆனால் இடையில்............தமிழ் எள்ற ஒரு மொழி இருந்தததை சிலரே அறிந்திருக்கிறார்கள். ஒரு சில குடும்பத்தாரே தம் பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லித் தந்திருக்கிறார்கள்..இடையில் என்ன ஆயிற்று?   சமஸ்கிருத, ஆங்கில மோகம்.  தமிழர்களை ஆட்டிப்படைத்து அலங்கோலமாக்கியிருக்கிறது. தன்னையே இழக்கச் செய்திருக்கிறது.-
தமிழுக்குத் தமிழ் உணர்வில்லாத தமிழரிடமிருந்துதான்  விடுதலை வேண்டும் என்பதை மிகச்சிறப்பாக நாவலாசிரியர் பதிவு செய்துள்ளார். மிக எளிய நடை. படிக்கத்தூண்டும்  உரையாடல்கள். இந்நாவல்  ஒரு வரலாற்று நாவல். இதில் வரலாறும் உள்ளது.  ஒரு துப்பறியும் நாவல் போல் வாசகரை கட்டிப்போடும் விறுவிறுப்பும் உள்ளது.தமிழின் நிலையை வைத்து எழுதப்பட்ட நாவல் இது ஒன்றாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். 
அமரர் .பேராசிரியர். கல்கி அவர்களின் எளிய மனம் கவரும் நடைக்கு கிட்டத்தட்ட ஈடு கொடுக்கும் அமைப்பில் சம்பவ அடுக்குக்களை இனி என்ன இனி என்ன என்று எதிர்பார்ப்புகளை உருவாக்கும் அமைப்பில் படைத்திருக்கிறார். இந்த நாவலில் எதிர்காலவியலை யும், நிகழ்காலத்தையும், பழன்காலத்தையும் அறிவியல் புனைவோடு ஒருங்கிணைத்து, எச்.ஜி.வெல்ஸின் டைம் மெஷின் கற்பனைக்குச் சவால் விடுவது போன்ற காட்சியமைப்பு மிகவும் ரசிக்கத்தக்கது.அத்தியாயத்திற்கு அத்தியாயம் ஓவியர் தமிழின் இரு அற்புத ஓவியங்கள் அமைத்து தாரிணி பதிப்பகம் இதை வெகு சிறப்பாக வெளியிட்டிருக்கிறது. இது தமிழ் கூறும் நல்லுலகமெங்கும் பரவி தமிழ் உணர்வை சரியான விதத்தில் வளர்க்கவேண்டும் .
நல்வாழ்த்துக்கள் 




No comments:

Post a Comment