![]() |
சிறுகதை-நேற்று, இன்று, நாளை |
தமிழ்ச் சிறுகதை உலகில் - நாவல் களத்துக்கும் - பல போக்குகளும், கோட்பாடுகளும் தமக்கான பெயர்களைத் தாங்கி உலவிவருகின்றன. யதார்த்தம், மாய யதார்த்தம், இருத்தலியல், அமைப்பியல், நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்று பல பெயர்கள். இவையனைத்தும் மேலை இலக்கியப் புலத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகள்தான். பொதுவாக இலக்கியத்தில் ஒரு குறிப்பிட்ட போக்கு இயல்பாகப் பரிமாணம் பெற்று, செறிவடைந்து இறக்குமதி செய்து அதற்கேற்ற படைப்புமுயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எனவே, இதில் ஒரு செயற்கைத்தனமும், அந்நியத்தனமும் குடிகொள்கிறது.
ஒவ்வொரு புதுப்பெயர் வரும்போது அதை வலுக்கட்டாயமாகத் திணித்து, அதற்கேற்ப கதை உற்பத்தி செய்யும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறைப் பிரசவங்களுக்கும் நிகழ்கின்றன. அதே நேரத்தில் இந்தப் புதிய போக்கின் தத்துவத்தையும், அடிநாதத்தையும், சாரத்தையும் உள்வாங்கி அவற்றைத் தன் படைப்புமுயற்சியின் உயிர்ப்புடன் சுவீகரித்துக்கொள்ளும் படைப்பாளிகளும் உள்ளனர். காலப்போக்கில் இந்தத் தடங்களில் குறிப்பிடத்தக்கன செய்த படைப்பாளிகள் உள்ளனர்.
தமிழ்ச் சிறுகதை உலகில் உலகத்தரம் பெற்ற ஏராளமான சிறுகதைப் படைப்புகள் பிறந்துள்ளன. எனவே இந்தக் களத்துக்குச் செறிவூட்ட புதிய போக்குகள் நம்மிடமிருந்தே முகிழ்த்தெழ வேண்டும். அவற்றுக்கு பெயர்சூட்டுவிழா பிறகு ஏற்பாடு செய்யலாம். இதன் மூலம்தான் மோஸ்தர் காற்றுக்கேற்ப பாய்மரம் விரிக்கும் நகல்களின் உற்பத்தி குறையும். உயிர்த்துடிப்புள்ள புதிய படைப்புகள் உருவாகும்.
..எதிர்காலத்தை நோக்கும் நேரம் வந்துவிட்டது. இன்றை தமிழ்ச் சிறுகதை எதிர்கொள்ளும் சில முக்கியமான அம்சங்களைப் பற்றி ஏற்கனவே மேலெழுந்தவாரியாகப் பார்த்துள்ளோம். தமிழ்ச் சிறுகதை ஒரு திருப்புமுனைப் புள்ளியில் இருப்பதாக நான் காண்கிறேன். சிறுகதை என்ற வகைமையின் ஈர்ப்பு தேய்ந்துகொண்டுவருகிறது.
பத்திரிகைகளிலும் சிறுகதைகளுக்கான முக்கியத்துவம் குறைந்து கொண்டுவருகிறது. இது வெகுஜனப் பத்திரிகைகளுக்கும் சிற்றிதழ்களுக்கும் ஒருங்கே பொருந்தும்.
சுய சரிதம், சுய அனுபவம், சுய தரிசனம் சார்ந்த எழுத்துக்கள் சிறுகதையின் இடத்தைப் படிப்படியாகப் பிடித்துவருகின்றன. வாசகர் களத்திலும் தீவிரப் படிப்புக்கான நேர ஒதுக்கீடு குறைந்துகொண்டே வருகிறது. தன் பணிக்களத்தில் முன்னேற வேண்டுமென்ற உந்துதல் இலக்கிய வாசிப்பைப் படிப்படியாகப் புறந்தள்ளிவருகிறது.
சிறுகதை பொடிக்கதையாகவும், மைக்ரோ கதையாகவும் சுருங்கிச் சுருங்கி மறைவு நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் இன்றை கள யதார்த்தம், எனவே சிறுகதை தன்னைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இதை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கான எளிதான விடை எனக்குப் புலப்படவில்லை.
எனினும் இந்தப்பிரச்சினையை இலக்கியவாதிகள் பொறுப்புணர்வுடன் எதிர்கொள்ளவேண்டும். எழுத்துவடிவில் படிக்கும் நேரமோ, ஆர்வமோ இல்லாத இளைய சமூகத்தை, நல்ல குரலில் பதிவு செய்து சிறுகதை ஒலிப்பதிவுகள் மூலமாக அணுக முயற்சிக்கலாம்.
பல பத்தாண்டுகள் எதிர்கொள்ளாத அதிவேகமான மாற்றங்கள் இன்றைய சமூக பொருளாதாரக் களன்களின் யதார்த்தம். இதனை இலக்கியம் மூலையில் உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. மாற்றத்தின ஊக்கியாக விளங்கும் வாய்ப்பு குறைந்தாலும், மாற்றத்தை அர்த்தமுடன் எதிர்கொண்டு அதில் சாரத்தியம் செய்யும் ஆற்றலை இலக்கியம் வளர்த்துக்கொள்ள வேண்டும். செயல்படுத்தவேண்டும். இந்த மாற்றங்கள் எழும்பும் சில கவலைகளையும் கேள்விகளையும் பற்றிச் சிந்திப்பது பொருத்தமாக இருக்கும்.
-28 பக்கங்கள் கொண்ட இந்தச் சிறிய[விலை.ரூ.15/= மட்டுமே] ஆனால் மிகவும் இலக்கிய முக்கியத்துவம் கொண்ட இந்த நூலை வெளியிட்டிருப்பது:-
Dharini Pathippagam
4 A Ramea Flats
32/79 Gandhi Nagar 4th Main Road
Adyar, CHENNAI-600020
PH.24400135,Mobile.9940120341
No comments:
Post a Comment