Sunday, 5 June 2016

இது நிகழாதிருந்திருக்கலாம்

                       மகாதேவி வர்மா விட சிறிது மிஞ்சி....
                                      

                                       அரிசோனா மகாதேவன் (நாவலாசிரியர்)
நூறு வரிகளில் உரைநடை சொல்லும் உணர்ச்சிகளையும் கருத்துக்களையும், ஒரே  வரியில் சொல்வதுதான் கவிதை என்பார்கள். அந்த வகையில் தமிழ்ச் செல்வியின் “இது நிகழாதிருந்திருக்கலாம் ..” ஒரு கவிதைத் தொகுப்பு என்றே கருதுகிறேன்.
                                                               
மரபுக் கவிதைகளை மட்டுமே அமைப்பு முறையில் கவிதை என்று கருதும் என்னை,  உணர்ச்சியை வெளியிட்ட முறைமைக்கு தலை வணங்கும் வண்ணம், எனது கருத்துக்கு விதிவிலக்கு ஏற்படுத்த வைத்து இருக்கிறது தமிழ்ச் செல்வி அவர்களின் இக்கவிதைத் தொகுப்பு. 
காதல் சுவையையோடு அவலச் சுவையைப் பிழிந்து கலந்து கொடுப்பதில் வெற்றி கண்டிருக்கிறார். புளிக்கும் நெல்லிக்கனியைத் தேனில் ஊறவைத்துக் கொடுத்திருக்கிறார்.
அவலச் சுவையை பிழித்து தருவதில் தன்னிகரில்லாதவர் இந்தி மொழியில் மரபுக் கவிதை எழுதி, தனக்கு ஒரு சிறப்பான இடைத்தைப் பிடித்துக்கொண்ட கவிக்குயில் மகாதேவி வர்மா அவர்கள்தான். 
அவர் கவிதைகளில் காதல் சுவையைக் காண இயலாது.  அவ்வகையில் அவரைவிட சிறிது மிஞ்சி இருக்கிறார் தமிழ்ச்செல்வி என்று கொள்வதைத் தடுத்து நிற்பது, வெடித்துச் சிதறி இருக்கும் அவரது உணர்ச்சிப் பிழம்புகள் உரைநடைக் கவிதையாக இருப்பதுதான்.
அவர் மரபுக் கவிதையில் எழுத ஆரம்பித்தால் பொன்னாக இருக்கும் அவரது வடிவமைப்புகள் “பொன்மலர் நாற்றமுடைத்து” என்னும் புகழைப் பெரும் என்பதில் ஐயமே இல்லை. 
ஆங்கிலத்தில் “அன்னப் பாடல் (Swan Song)” என்று சொல்வார்கள்.  அதுபோல உள்ளத்தைத் தொடும் வகையில், இதுபோல் உணர்ச்சிகளை வெளிப்படுத்த இயலாது என்று எழுதியிருக்கும் இவர், மற்ற சுவைகளையும் மரபுக்கவிதைகளில் வடிவமைக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.
                                           திசை சுத்தம் தெரிகிறது
                                                    கவிஞர் மகுடேசுவரன்
 என்னென்னவோ உணர்வலைகளால் நம் அன்றாடங்கள் அரிக்கப்படுகின்றன. அவற்றை நின்று நிதானித்து அனுபவித்துத் தோய்ந்ததை உலகுக்கு அறிவிக்க ஆயிரத்தில் ஒருவர் முன்வந்தால்கூட ஆச்சரியமே. உணர்வுகள் உள்ளிருக்கும் திட வைரம். அடையாளங்கண்டு மேலெடுத்து பகலிரவு பாராமல் பட்டை தீட்டிக்கொண்டே இருக்கும் மனம் வாய்க்கப்பெற்றவர்களும் ஓரிருவரே. 
நிலைகுலைத்துவிடும் அலைகளால் ஆகிய நம் தினங்களை என்ன செய்துவிட முடியும் ? ஓடிப்போய் ஒளிய ஒளிய ஊக்கமெடுத்து அடிப்பவை அவை. இதயத்தைக் கல்நார் கொண்டு மூடியிட்டவர்கள் எப்படியோ கடந்து போய்விடுகிறார்கள். அல்லது அப்படியொரு காண்பித்தலைக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். மலரிதழாய்க் காற்றிலாட விட்டவர்கள் ஒவ்வொரு அசைவுக்கும் அதிர்ந்துகொண்டே இருக்கிறார்கள். கலைஞர்களும் கவிஞர்களும் அப்படிப்பட்டவர்கள். 
அலைகளையும் மழைத் துளிகளையும் கண்ணீர்ச் சொட்டுகளையும் சேர்த்துவைத்துக்கொண்டே இருந்தால் இறுதியில் அங்கே திட்டமில்லாத அணை தோன்றிவிடும். அந்த அணை இன்னும் தாங்க முடியாத ஒரு துளி எங்கிருந்தோ மர்மமாக வந்து விழுந்துவிட்டால் முற்றாக உடைந்துவழியும். இந்தச் செயலைத்தான் கவிஞர்கள் தோன்றிச் செய்கிறார்கள். அவர்கள் ஒரு துளியாய் மாறி உடைப்பதுவும் உண்டு. அணையாய் மாறி உடைவதுவும் உண்டு. தலைதாழ்ந்த துயரத்தில் மண் விழுந்து அழுதுகொண்டிருப்பதும் ஓரளவுக்குத்தான். அந்த மண்ணிலேயே ஈர்க்குச்சியைக் கொண்டு வரைவதுதான் இயல்பு.
மலைமுகட்டில் உள்ள இரகசிய இடுக்குகளில் வழியும் கன்னித்துவமான ஈரத்தைத் தம் மொழியில் கவிதையாக்கியுள்ளார் இந்தக்கவிஞர். அதில் எழும்பி நிற்கும் அந்தரங்க உலகம் உள்ளத்தைப் பதைபதைக்க வைக்கிறது. உவப்பும் கரிப்புமாய்க் கன்னத்தில் கசிந்துகொண்டேயிருக்கும் ஒரு திரவத்தை அவருக்கு அடையாளங் காணத் தெரிந்திருக்கிறது. அவருடைய தனிமையும் தள்ளாட்டமும் பித்துற்ற நிலையும் மொழியில் முதிரத் துடிக்கின்றன. சத்தேறிய புத்துயிர்க் கனிகளாய்ச் சுவைக்கின்றன அவை. 
கடக்க வேண்டிய தொலைவு மிக அதிகமென்றாலும் எடுத்து வைத்த அடியில் திசை சுத்தம் தெரிகிறது. வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment