Saturday, 4 June 2016

ஜெயகாந்தனும் நானும்


தேவபாரதியின் புதிய நூல் - தமிழுக்குக் கிட்டியுள்ள பொக்கிஷம்!
 
திருப்பூர் கிருஷ்ணன்
 *அண்மையில் காலமான ஜெயகாந்தன் எழுத்து, பேச்சு, அரசியல், சினிமா எனப் பன்முக ஆளுமை கொண்டவர். அந்த மாபெரும் ஆளுமையைப் பற்றித் தமிழில் வெளிவந்துள்ள மிகச் சில நூல்களில் மிகவும் முக்கியமான நூல் இது. நூலாசிரியர் தேவபாரதி ஜெயகாந்தனுடன் நெருங்கிப் பழகியவர். ஒரே மூச்சில் படிக்கும ஆர்வத்தை இந்நூல் ஏற்படுத்தக் காரணம் தேவபாரதியின் பல்லாண்டு காலமாக எழுதிப் பண்பட்ட நடை.
                             

  எழுத்தாளர் வையவனின் முன்னுரை இந்நூலின் அந்தஸ்தை அதிகரிக்கிறது. ஜெயகாந்தன் தமிழக வரலாற்றில் அந்தக் காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளில் நேரடியாகவும் மறைமுகச் செல்வாக்காகவும் இருந்தவர் என்பது உள்பட வையவனின் பல கருத்துக்கள்  சிந்தனையைத் தூண்டுகின்றன.
  கண்ணதாசனின் வனவாசம் அதன் வெளிப்படைத் தன்மைக்காகத் தமிழ் வாசகர்களால் இன்றளவும் கொண்டாடப் படுகிறது. அதேபோன்றதொரு வெளிப்படைத் தன்மையை இந்நூலிலும் காண்கிறோம். இந்நூலாசிரியர் குடிக்கு அறிமுகப்படுத்தப் பட்டதை விவரிக்கும் நான்காம் அத்தியாயம், ஜே கே. கையெழுத்தைப் போட்டு வங்கியில் பணம் பெற்றதைச் சொல்லும் பகுதி போன்றவை உதாரணங்கள்.
 சில மனிதர்கள் செய்த சின்னச் சின்னத் தந்திரங்கள் பற்றியும் நூல் சுவாரஸ்யமாய் விவரிக்கிறது. 
                                 

ராமசாமி என்பவர் சினிமாக் கம்பெனிகளில் சிகரெட் வாங்கி அவற்றைக் கடைகளுக்கு விற்றுவிடுவது (பக். 29), எம்.எஸ். கண்ணன் கம்பெனிக்குச் சிறிதுதூரத்தில் டாக்சி பிடித்து வந்து, டாக்சியில் வீட்டிலிருந்தே வந்ததாகத் தோற்றம் காட்டி கூடுதல் பணத்தைப் போக்குவரத்துப் படியாகப் பெற்றுவிடுவது (பக். 44) என்பன போன்ற விஷயங்கள், வேடிக்கை மனிதர்களின் சின்னத்தனங்களை எண்ணி நம் முகத்தில் ஒரு மெல்லிய முறுவலைப் படரவிடுகின்றன.
  ஒரு முட்டைக்கடைக்காரர் இளம்வயதிலேயே ஜெயகாந்தனைப் பார்த்து, `ஈ ஆளு வல்லிய ஆளாயிட்டு வரும்` என்றாராம். சரஸ்வதி பத்திரிகையில் வெளிவந்த ஜெயகாந்தனின் சிறுவயதுப் புகைப்படத்தைப் பார்த்து அதில் ஜேகே முகத்தைச் சுற்றித் தனக்கு ஓர் ஒளிவட்டம் தெரிவதாகவும் அவர் சொன்னாராம். (பக்...57)
  தோழர் பாலதண்டாயுதத்தை அவர் விபத்தில் இறப்பதற்கு முந்தின நாள் ஜெயகாந்தன் போய்ப் பார்த்ததும், பாலதண்டாயுதம் மறுநாள் விமானத்தில் தில்லி போவதாகச் சொன்னதும். மறுநாள் வானில் பறக்கும் ஆகாய விமானத்தைக் காட்டி பாலன் இதில்தான் தில்லி போகிறார் என்று ஜெயகாந்தன் சொன்னதும் எல்லாம் படித்துக் கொண்டே வருகிறோம. அதே விமானம் விபத்துக்குள்ளாகி பாலதண்டாயுதம், மோகன் குமாரமங்கலம் இருவருமே மறைந்ததைப் பற்றிப் படிக்கும்போது அது நம் மனத்தை ஓர் உலுக்கு உலுக்குகிறது. `நெருநல் உளனொருவன் இன்றில்லை` என்பதை இதைவிட நெஞ்சைத் தாக்கும வகையில் சொலல  முடியுமா? (பக். 52.).
  ஜே. கிருஷ்ணமூர்த்தி தொடர்பான பகுதி நம்மை யோசனையில் ஆழ்த்துகிறது. `ஸ்தாபனங்களைத் தாம் ஆதரிக்கவில்லை.` என்றார் அவர்.  `அப்படியானால் ஸ்தாபனங்கள் வேண்டாம் என்பவர்களின் ஸ்தாபனமாக அது மாறிவிடும்` என்றும், எதுவும் ஸ்தானபமாவதைத் தவிர்க்க இயலாது என்றும் தேவபாரதி சொல்கிறார். அதை ஜெயகாந்தன் ஆமோதிக்கிறார். (பக். 70 ). உண்மைதானே? சிலை வழிபாட்டை எதிர்த்த தலைவரின் சிலைக்கு அவரின் பிறந்தநாள் தோறும் மாலையிட்டு வழிபாடு செய்வதைத் தான் பார்க்கிறோமே?
  நாடு பூஜித்த பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். பற்றி அச்சமின்றித் தம் கருத்துக்களைச் சொன்னவர் ஜெயகாந்தன் என்பதையும் தேவபாரதி பதிவுசெய்கிறார். கண்ணதாசனுக்கும் ஜெயகாந்தனுக்கும் இடையே உள்ள நட்பைப் பற்றியும் நூல் பேசுகிறது. எம்.ஜி.ஆரை எதிர்த்து எழுதப்பட்ட `சினிமாவுக்குப் போன சித்தாளு` நாவலைக் கண்ணதாசன் கொண்டாடியது பற்றியும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார். (பக்..41 ).
 `முன்னணி` பத்திரிகை சார்பாக வாசவன் வந்து ஜெயகாந்தனிடம் கதை கேட்டாராம். ஜெயகாந்தன் தன் படைப்புக்குச் சன்மானம் கேட்டாராம். பத்திரிகை சின்னது என்றாராம் வாசவன். அதுசரி. நான் பெரிய எழுத்தாளன் இல்லையா என்றாராம் ஜெயகாந்தன்! (பக்..30) 
  ஜெயகாந்தனின் திரைத்துறை சார்ந்த ஆளுமையையும் கச்சிதமாகப் பதிவுசெய்கிறார் தேவபாரதி. சந்திரபாபு, தமிழ் ஒளி போன்ற பலரைப் பற்றிய அரிய செய்திகள் நூலில் வருகின்றன. சி.ஏ. பாலன் பற்றிய பகுதிகள் சிந்திக்க வைப்பவை. `வன்முறைப் போராட்டம் அரசியல் பிழை..சாத்விக காந்திய முறையில் தான் சமூகத்தில் மாறுதலை ஏற்படுத்த முடியும்` என்று தூக்குமரத்தின் நிழலில் என்ற நூலை எழுதிய, தூக்குத் தண்டனை பெற்று மீண்ட கைதியான பாலன் சொன்னதும், `பயத்தினாலா இந்த மனமாற்றம்?` என்று லெனின் கேட்டதும், `இல்லை..வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடம்` என பாலன் பதில் சொன்னதும் தத்துவப் பார்வையுடன் நூலில் பதிவாகியுள்ளன. (இப்படிச் சொன்ன சி.ஏ. பாலன் சில மாதங்களில் மரணம் அடைந்துவிட்டார்...பக். 20) பரலி சு. நெல்லையப்பர். கனகலிங்கம் ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பை தேவபாரதி பெற்றது பற்றியும் இந்நூல் பேசுகிறது. (பக்.36)
  `நடைபாதை` என்ற நாவல் மூலம் புகழ்பெற்ற எழுத்தாளர் அமரர் இதயன் பற்றி இந்நூலில் உள்ள வரிகள் தனிப்பட்ட முறையில் என்னை உருக்கின.(பக்.74.). தினமணிகதிரில் அவர் என்னோடு பணிபுரிந்ததால் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்றவன் நான். வேலூரைச் சார்ந்த அவர் நல்ல குணங்களால் மட்டுமே உருவானவர். இப்போது பெங்களூரில் வசிககும் எழுத்தாளர் விட்டல்ராவின் நெருங்கிய நண்பராக இருந்தவர். இதயனின்  மறைவு இலக்கிய உலகிற்கு மட்டுமல்ல, மனித குலத்திற்கே இழப்பு.
  `எழுதக் கூடாததை எழுதாதவனே சிறந்த எழுத்தாளன்` என்று ஜெயகாந்தன் சொன்னதாக இந்நூலில் வரும் வரி அட்சரலட்சம் பெறும். (பக். 129). எழுத்தில் கண்ணியம் வேண்டும் என்பதை இதைவிடச் சிறப்பாக எப்படிச் சொல்ல முடியும்?
 `பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே` என்ற பாரதியின் வரி, தேவபாரதியின் இந்நூலில் ஓரிடத்தில் வருகிறது. (பக்.51). நூலை வாசித்து முடித்ததும் நம் நெஞ்சு கனக்கிறது. நம் மனத்திலும் ஜெயகாந்தன் வாழ்ந்த அந்தப் பொற்காலம் பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே என்ற ஏக்கம் எழுகிறது. எழுத்தாளர் குறித்த நினைவலை நூல்களில் அண்மையில் வெளிவந்துள்ள இந்நூல் தமிழுக்குக் கிட்டியுள்ள பொக்கிஷம்.
===============================
நூல்: ஜெயகாந்தனும் நானும், ஆசிரியர்: தேவபாரதி, வெளியீடு: கலைஞன் பதிப்பகம், 19. கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை- 600 017. பக். 160. விலை ரூ. 150.
=======================================
 நன்றி:அமுதசுரபி ஜூன் 2016ல் வெளிவந்த கட்டுரை 



No comments:

Post a Comment